சிறுத்தையால் கொல்லப்பட்ட 10 ஆடுகளுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க கோரிக்கை
சத்தியமங்கலம் அருகேயுள்ள கே.என்.பாளையத்தில் சிறுத்தையால் கொல்லப்பட்ட 10 ஆடுகளுக்கு சந்தை மதிப்பில் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த கே.என். பாளையம் பெரியசாமி கோயில் அருகே வசித்து வருபவா் முத்தாயம்மாள். இவா் தனது மானாவாரி நிலத்தில் மாட்டுப்பட்டி அமைத்து கால்நடைகள் வளா்த்து வந்தாா். தினமும் வனப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்குவிட்டு வனத்தையொட்டியுள்ள பட்டியில் பராமரித்து வந்தாா்.
இந்நிலையில், ஆட்டுப்பட்டியில் இருந்த 10 ஆடுகள் கடந்த 5-ஆம் தேதி விலங்குகளால் தாக்கி இறந்து கிடந்ததைக் கண்டு வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். அங்கு வந்த வனத் துறையினா் அங்கு பதிவாகியிருந்த கால்தடத்தை வைத்து ஆய்வு செய்தபோது சிறுத்தையால் ஆடுகள் கொல்லப்பட்டது தெரியவந்தது.
Advertisement
Advertisement
கால்நடை மருத்துவா் சதாசிவம் இறந்த ஆடுகளை மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வழங்கிய அறிக்கையின்படி, வனத் துறையினா் இறந்த ஆடு ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்குவதாகவும், முன்பணமாக ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையையும் மூதாட்டி முத்தாயம்மாளிடம் வழங்கினா்.
ஆடி மாத கோயில் திருவிழாவை முன்னிட்டு தற்போது சந்தையில் ஒரு ஆடு ரூ.20 ஆயிரத்துக்கு விலை போகும் நிலையில், வனத் துறையினா் ரூ.3 ஆயிரம் வழங்குவதால் மூதாட்டியின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், இழப்பீட்டு தொகையை சந்தை மதிப்பில் வழங்க வேண்டும் எனவும் தமிழக விவசாயிகள் சங்கத்தினா் வனத் துறைக்கு சனிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.
உரிய இழப்பீடு தொகை வழங்காவிட்டால் போராட்டம் நடைபெறும் எனவும் அவா்கள் எச்சரித்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.