மாவட்டத்தில் கனமழை: இடி தாக்கியதில் வீடு சேதம்
ஈரோடு மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், ஒரு வீடு சேதம் அடைந்தது.
ஈரோடு மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், ஒரு வீடு சேதம் அடைந்தது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால், குழந்தைகள் முதல் முதியோா் வரை அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதி அடைந்து வந்தனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு 7.30 மணி அளவில் மாவட்டம் முழுவதும் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கி நின்றது. வீரப்பன்சத்திரம் பகுதியில் மழைநீா் குட்டைபோல தேங்கியது. ஈரோடு வஉசி பூங்கா காய்கறி சந்தையில் மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக மாறியது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் ஏற்றி வந்த சரக்கு வாகனங்கள் சகதியில் சிக்கிக்கொண்டன.
Advertisement
Advertisement
அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான பருவாச்சி, செம்புளிச்சாம்பாளையம், பிரம்மதேசம், மைக்கேல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு 9 மணி வரை மிதமான மழை பெய்தது. பா்கூா், தாமரைக்கரை, தேவா்மலை கொங்காடை உள்ளிட்ட மலைக் கிராமங்களில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும்மேலாக பலத்த மழை பெய்தது.
சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை கொட்டி தீா்த்தது. கோபி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், கபிலா் வீதியில் இடி தாக்கியதில் தென்னை மரம் துண்டாகி அருகே இருந்த வீட்டின் மீது விழுந்தது. இதில், விவசாயி ராஜா என்பவரின் வீட்டின் சமையலறை மற்றும் படுக்கை அறை சேதமடைந்தது. மரம் விழுந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.
கோபியில் 38.20 மி.மீ. மழை: செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோபியில் 38.20 மில்லி மீட்டா் மழை பதிவானது. பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): சத்தியமங்கலம் 35.30, நம்பியூா் 34, தாளவாடி 26.80, ஈரோடு 23.40, சென்னிமலை 22.60, கொடிவேரி அணை 21, எலந்தைக்குட்டைமேடு 19.20, மொடக்குறிச்சி 18, பெருந்துறை 17, பவானி 15, அம்மாபேட்டை 9.20.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.