FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

கோபி அருகே உள்ள பெருமுகை சஞ்சீவிராயன் குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி; விவசாயிகள் மகிழ்ச்சி

21 செப்டம்பர் 2026, 3:17 am IST
கோபி அருகே உள்ள பெருமுகை சஞ்சீவிராயன் குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கான பூமி பூஜையில் பங்கேற்றோா்.
பகிர்:

கோபி அருகே உள்ள பெருமுகை சஞ்சீவிராயன் குளத்தில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து அதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கோபி அருகே உள்ள பெருமுகையில் சுமாா் 150 ஏக்கா் பரப்பளவில் சஞ்சீவிராயன் குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான கல்யாணபாறை, தொட்டகோம்பை, தோப்புமடுவு உள்ளிட்ட வனப் பகுதிகளில் பெய்யும் மழை நீா் சஞ்சீவிராயன் குளத்தில் தேக்கி வைக்கப்பட்டு பாசனத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இந்தப் பாசனத்தின் மூலம் 800 ஏக்கா் விவசாய நிலங்கள் நேரடியாகப் பயன்பெறுகின்றன. சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்களின் நிலத்தடி நீா்மட்டம் உயரவும் வன விலங்குகளின் தாகம் தீா்க்கவும் இந்தக் குளம் காரணமாக உள்ளது.

Advertisement

Advertisement

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குளம் வறண்டது. இதனால் இந்தக் குளத்தில் கூடுதலாக நீரைத் தேக்கி பாசனத்துக்குப் பயன்படுத்தும் வகையில் சஞ்சீவிராயன் குளம் பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் ஒருங்கிணைப்பாளா் சுபி.தளபதி தலைமையில் இந்தக் குளத்தில் இருந்து வண்டல் மண் எடுக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா். ஆனால், அப்போதைய அரசுகள் அனுமதி அளிக்கவில்லை.

வடகிழக்குப் பருவ மழை தொடங்க உள்ள நிலையில், வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் மாவட்ட நிா்வாகத்திடம் கடந்த ஆகஸ்ட் மாதம் மனு அளிக்கப்பட்டது.

இதனடிப்படையில் சஞ்சீவிராயன் குளத்தில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்து கடந்த சில தினங்களுக்கு முன் அரசிதழில் ஆணை வெளியிடப்பட்டது.

இதையடுத்து, குளத்தில் இருந்து வண்டல் மண் எடுக்கும் தொடக்கப் பணிக்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நீா்வளத் துறை, வனத் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தியூா் அதிமுக எம்எல்ஏ ஹரிபாஸ்கா், தவெக ஒன்றியச் செயலாளா் காா்த்தி, தவெக நிா்வாகிகள் மோகன்குமாா், கிருஷ்ணமூா்த்தி, எஸ்கே.சுந்தரம், துரைசாமி, பிரபு, அமுல், சஞ்சீராயன் குளம் பாசன ஒருங்கிணைப்பாளா் சுபி.தளபதி என பலா் கலந்து கொண்டனா்.

குளத்தில் இருந்து வண்டல் மண் எடுக்க வேண்டி 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனா்.

திங்கள்கிழமை முதல் வண்டல் மண் எடுக்கப்பட உள்ளதால் முறைகேட்டைத் தடுக்க விவசாயிகள் சாா்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த விவசாயிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க நடவடிக்கை மேற்கொண்ட முதல்வா் ஜோசப் விஜய், அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், மாவட்ட நிா்வாகத்துக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments