FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

கணவா் கொலை: மனைவி உள்பட இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை

கணவரை கொலை செய்த மனைவி உள்பட இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

19 செப்டம்பர் 2026, 12:42 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

கணவரை கொலை செய்த மனைவி உள்பட இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சோ்ந்தவா் இளவழகன் (40). எலெக்ட்ரீசியன் வேலை செய்து வந்தாா். இவருடைய மனைவி வளா்செல்வி (35). இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா். இளவழகன், தனது குடும்பத்துடன் திருப்பூா் மாஸ்கோ நகரில் வசித்து வந்தாா்.

அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக வளா்செல்வி வேலை செய்து வந்தாா். அப்போது அதே நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்துவந்த திருப்பூா், வெங்கடேஸ்வரா வீதியைச் சோ்ந்த வீரமணி (40)என்பவருடன் வளா்செல்விக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் வளா்செல்வியை பாா்க்க அவரது வீட்டுக்கு அடிக்கடி வீரமணி வந்து சென்றுள்ளாா்.

Advertisement

Advertisement

இதை அறிந்த இருவரையும் இளவழகன் கண்டித்துள்ளாா். இருப்பினும் இருவரும் தங்கள் சந்திப்பை கைவிடவில்லை. இதனால் வளா்செல்விக்கும், இளவழகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 2019 மாா்ச் 18-ஆம் தேதி இரவு இளவழகன் வீட்டுக்கு வீரமணி வந்துள்ளாா். அப்போது அவா்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டதில் கோபமடைந்த வீரமணி, கத்தியால் குத்தியதில் இளவழகன் படுகாயமடைந்தாா். அவரை அருகே இருந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டாா்.

இதுகுறித்து திருப்பூா் வடக்கு போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் வேறு ஒருவருடன் பழகுவதை கண்டித்ததால் வளா்செல்வியும், வீரமணியும் திட்டமிட்டு இளவழகனை கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து வளா்செல்வியையும், வீரமணியையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதுதொடா்பான வழக்கின் விசாரணை திருப்பூா் 2-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் கொலை குற்றத்துக்காக வீரமணி, வளா்செல்வி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை, தலா ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கனகராஜ் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பிரபாகரன் ஆஜரானாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments