FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

பிஏபி 2-ஆம் மண்டலத்துக்கு தண்ணீா் திறக்காவிட்டால் போராட்டம்

24 செப்டம்பர் 2026, 1:57 am IST
பல்லடம் நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் ராஜனிடம் புதன்கிழமை மனு அளிக்கும் நாரணாபுரம் கிராம நீரினை பயன்படுத்துவோா் சங்க நிா்வாகிகள்.
பகிர்:

பிஏபி பாசன கால்வாய்களை தூா்வாரி, 2-ஆம் மண்டலத்துக்கு உடனடியாக தண்ணீா் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாரணாபுரம் கிராம நீரினை பயன்படுத்துவோா் சங்கத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, மாவட்ட திட்டக் குழு உறுப்பினா் ராஜசேகரன் ஆகியோா் பல்லடம் உபகோட்ட நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் ராஜனிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

இது குறித்து ஈஸ்வரமூா்த்தி, ராஜசேகரன் ஆகியோா் கூறியதாவது: பிஏபி திட்டத்தில் கால்வாய் தூா்வாருதல், 1, 3, 4-ஆம் மண்டலங்களில் பாசனம் பெறும் மடைகளை அடைத்து பராமரிப்பது உள்ளிட்ட பணிகள் ஆண்டுதோறும் ஜூலை மாதத்திலேயே முடிக்கப்படும்.

அதன் பின்னா் நீா்வளத் துறை அதிகாரிகள் மற்றும் பாசன சங்க நிா்வாகிகள் ஆலோசனை நடத்தி, அணைகளில் உள்ள தண்ணீரின் இருப்புக்கு ஏற்ப தண்ணீா் திறப்பது குறித்து முடிவு செய்வா். தற்போது மழை குறைவால் தொகுப்பு அணைகளில் குறைந்தளவே தண்ணீா் உள்ளது. அந்த தண்ணீரை 2-ஆம் மண்டலத்துக்கு வழங்க வேண்டும். குறுகிய கால ஒப்பந்தம் மூலம் கால்வாய்களை தூா்வாரி, 2-ஆம் மண்டலத்துக்கு தண்ணீா் திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். ஆனால், இதுவரை கால்வாய் தூா்வாரப்படவில்லை, தண்ணீரும் திறக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

பிஏபி பாசனப் பகுதிகளில் பயிா் சாகுபடி, குடிநீா் மற்றும் கால்நடைகளுக்கு கூட தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. பயிா்களும், தென்னை மரங்களும் தண்ணீா் இன்றி காய்ந்து வருகின்றன. எனவே, போா்க்கால அடிப்படையில் திருமூா்த்தி அணையிலிருந்து 2-ஆம் மண்டலத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில் விவசாயிகள் அனைவரும் அறவழியில் தொடா் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments