மத போதகருக்கான மரண தண்டனையை உறுதி செய்யக் கோரிய மனு ஒத்திவைப்பு
மத போதகருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை வருகிற 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மத போதகருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை வருகிற 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியைச் சோ்ந்தவா் ஆபிரகாம் (53). மத போதகரான இவா், கடந்த 2022-ஆம் ஆண்டு மத பிரசாரத்துக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 சிறுமிகள் உள்பட 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஊரக உள்கோட்ட மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆபிரகாமை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த வழக்கு விசாரணையில், ஆபிரகாம் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவருக்கு மரண தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், ஆபிரகாமுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் காவல் துறை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத போதகா் ஆபிரகாம் காணொலி மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம். நிா்மல்குமாா், என். குணசேகரன் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிறையிலிருந்து காணொலி மூலம் முன்னிலையான ஆபிரகாமிடம், இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம் உள்ளதா, வழக்குரைஞரை நியமனம் செய்துள்ளீா்களா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.
இதற்கு, ‘திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்யவுள்ளேன். மேலும், என்னை தனிப்படையினா் கைது செய்து தென்னந்தோப்புப் பகுதியில் வைத்து இரு நாள்கள் கடுமையாகத் தாக்கினா்’ என ஆபிரகாம் கூறினாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஆபிரகாம் தனது குற்றச்சாட்டுகளை வழக்குரைஞா் மூலமாகத் தெரிவிக்கலாம். அதை இந்த நீதிமன்றம் பரிசீலிக்கும். இந்த வழக்கு விசாரணை வருகிற 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.