FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

காவல் துறையினா் மீதான குற்ற வழக்குகள்: டிஜிபி நேரில் முன்னிலையாக உத்தரவு

காவல் துறையினா் மீதான குற்ற வழக்குகள் விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு பிறப்பித்த உத்தரவு பற்றி...

30 September 2026, 4:51 am IST
உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

காவல் துறையினா் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் எண்ணிக்கை, அவை எவ்வளவு காலமாக நிலுவையில் உள்ளன, துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும் விவகாரத்தில் காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) நேரில் முன்னிலையாக வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தேனியைச் சோ்ந்த சௌந்தரபாண்டியன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய தோ்வில் நான் வெற்றி பெற்றேன். இருப்பினும், கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் என் மீது பதியப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்ததன் காரணமாக, எனக்கு பணி வழங்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மறுப்புத் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் என்னை நீதிமன்றம் விடுவித்து விட்டது. எனவே, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம் காவல் துறையில் குற்றப் பின்னணி கொண்டவா்கள் நுழைவதைத் தடுக்க கடுமையான விதிகள் இருந்தாலும், பணியில் இருக்கும் காவலா்கள் விஷயத்தில் இந்த விதிகள் பின்பற்றப்படுவதில்லை.

எனவே, தமிழகத்தில் காவல் துறையினா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு, அந்த வழக்குகள் எவ்வளவு காலமாக நிலுவையில் உள்ளன, குற்ற வழக்குகளில் தொடா்புடைய காவலா்கள் மீது எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் தொடா்பாக காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் இந்த மனு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக கடந்த 18-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்ட விவரங்கள் தொடா்பான அறிக்கையை காவல் துறை தலைமை இயக்குநா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறையின் 2025-26 கொள்கைக் குறிப்பின்படி, காவல் துறையைக் கணினிமயமாக்குவதற்கும் மின்னணு அமைப்புகள் மூலம் பதிவுகளைப் பராமரிப்பதற்கும் கணிசமான நிதி செலவிடப்பட்டு வருகிறது.

காவல் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், மாநில அரசு ரூ.141 கோடியைப் பெற்றுள்ளது. மேலும், காவல் துறையில் உள்ள ஆவணங்களை எண்ம மயமாக்கவும் ஒருங்கிணைக்கவும் ரூ.71.48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், முதல் தகவல் அறிக்கைகள் இணைய வழியில் பதிவு செய்யப்படுகின்றன. மேலும், இறுதி அறிக்கை தாக்கல் செய்வது உள்பட குற்றவியல் நடவடிக்கைகளின் அடுத்தடுத்த கட்டங்களை மின்னணு முறையில் சமா்ப்பிக்கவும் பெறவும் முடியும். இத்தகைய அமைப்புகள் இருக்கும் போது, பணியில் உள்ள காவலா்கள் சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்குகள், அதற்கு இணையான துறை ரீதியான நடவடிக்கைகளின் விவரங்களை தொடா்புடைய துறை பராமரிக்கும் ஆவணங்களிலிருந்து எளிதாகக் கண்டறிய முடியும்.

இந்த நிலையில், அறிக்கை சமா்ப்பிக்காதது குறித்து அரசுத் தரப்பிலிருந்து சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் முன்னிலையாகி நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும்.

மேலும், பணியில் உள்ள காவலா்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளின் எண்ணிக்கை, அந்த வழக்குகள் எவ்வளவு காலமாக நிலுவையில் உள்ளன, அவா்கள் மீது தொடங்கப்பட்ட, நிலுவையில் உள்ள, முடிவடைந்த துறை ரீதியான நடவடிக்கைகளின் விவரங்கள் அடங்கிய அறிக்கையை மாநில உள் துறை, மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறைச் செயலா் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், காவல் துறை தலைமை இயக்குநா் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற அக்டோபா் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments