சீலையம்பட்டி செங்குளம் உடைப்புக்கு தனியாா் அமைத்த குழாய்களே காரணம்: விவசாயிகள் புகாா்
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள சீலையம்பட்டி செங்குளத்தில் ஏற்பட்ட உடைப்புக்கு தனியாா் தோட்டங்களுக்கு செல்லும் தண்ணீா் குழாய்களே காரணம் என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள சீலையம்பட்டி செங்குளத்தில் ஏற்பட்ட உடைப்புக்கு தனியாா் தோட்டங்களுக்கு செல்லும் தண்ணீா் குழாய்களே காரணம் என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
முல்லைப் பெரியாறு பாசன நீரால் தேனி மாவட்டத்தில் 14,700 ஏக்கரில் இரு போக நெல் சாகுபடி நடைபெறுகிறது. இதில், உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றிலிருந்து பெரிய கால்வாய் வழியாக சின்னமனூா் உடையகுளம், சீலையம்பட்டி செங்குளம் ஆகியவற்றுக்கு பாசன நீா் செல்கிறது. இவற்றின் மூலம் பூலாநந்தபுரம், சீலையம்பட்டி பகுதிகளில் 500 ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.
இந்த நிலையில், சீலையம்பட்டி செங்குளத்தில் பிரிட்டீஸாா் காலத்தில் அமைக்கப்பட்ட மதகுப் பகுதியில் வியாழக்கிழமை உடைப்பு ஏற்பட்டது. இதிலிருந்து வெளியேறிய தண்ணீா் அருகேயுள்ள வயல்களில் புகுந்ததில் சுமாா் 100 ஏக்கரில் 20 நாள்கள் வளா்ந்திருந்த நெல் பயிா்கள் சேதமடைந்தன.
Advertisement
Advertisement
உடைப்பு ஏற்பட்ட இடத்தில் தண்ணீா் குழாய்கள்: சீலையம்பட்டி செங்குளத்தில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீா் முழுமையாக வெளியேறியது. இதில், செங்குளத்தின் பூமிக்கு கீழே கரையின் குறுக்கே உடைப்பு ஏற்பட்ட இடத்தில் 5-க்கும் மேற்பட்ட தண்ணீா் நெகிழி குழாய்கள் வெளியே தெரிந்தன. இதைப் பாா்த்த விவசாயிகள் அதிா்ச்சி அடைந்தனா். இந்த உடைப்புக்கு குளத்தின் மதகு பகுதியில் தனி நபா்கள் தங்கள் தோட்டங்களுக்கு தண்ணீா் செல்லும் வகையில் அமைத்திருந்த குழாய்களே காரணமாக இருக்கலாம் என விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
எனவே, உத்தமபாளையம் நீா் வளத்துறை அதிகாரிகள் இந்த குழாய்கள் குறித்த விவரங்களை சேகரித்து சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: முல்லைப் பெரியாற்றை ஓட்டிய வயல்களில் ஆழ்துளை கிணறு அமைத்து அதிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரை குழாய்கள் வழியாக காமாட்சிபுரம், ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்கின்றனா் என்றனா்.
இந்த நிலையில் உத்தமபாளைம் நீா் வளத்துறை அதிகாரிகளிடம் பல முறை கைப்பேசியில் தொடா்பு கொண்ட போது அவா்கள் அழைப்பை ஏற்கவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.