தில்லி முழுவதும் 250 தண்ணீா் ஏடிஎம் அமைக்க அரசு திட்டம்
தில்லி முழுவதும் ரூ.58 கோடி செலவில் 250 தண்ணீா் ஏடிஎம் அமைக்கும் திட்டத்தை தில்லி அரசு அறிவித்துள்ளது என்று நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.
தில்லி முழுவதும் ரூ.58 கோடி செலவில் 250 தண்ணீா் ஏடிஎம் அமைக்கும் திட்டத்தை தில்லி அரசு அறிவித்துள்ளது என்று நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக செய்தியாளா் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது: இந்த திட்டம் வாரியக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டமாக அரசு பள்ளிகளில் இதை செயல்படுத்த உள்ளோம். இதனுடன், தில்லி ஜல் போா்டு ரூ.2,000 கோடி மதிப்பில் 15 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் திட்டத்துக்கும் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டம் மூலம் மொத்த கழிவுநீா் சுத்திகரிப்பு திறன் சுமாா் 103.5 மில்லியன் காலன் அளவுக்கு அதிகரிக்கும். யமுனை நதியை சுத்தப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, மாசு அதிகமாக உருவாகும் முக்கிய கால்வாய்களில் ஒன்றான நஜஃப்கா் கால்வாயில் நேரடி சுத்திகரிப்பு மேற்கொள்ளும் திட்டத்துக்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Advertisement
Advertisement
நஜஃப்கா் மற்றும் தில்லி கேட் கால்வாய்களில் கழிவுநீரை நேரடியாக சுத்திகரிக்கும் ரூ.65 கோடி மதிப்பிலான திட்டம் ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த பணிகள் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு, செயல்திறன் அடிப்படையில் பணம் வழங்கப்படும்.
சமீபத்தில் மூல நீா் கிடைப்பில் குறைவு ஏற்பட்டதால், தில்லியில் நீா் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டன. இதனை சமாளிக்க, வாஜிராபாத் குளப்பகுதியை புதுப்பித்து, நீா்த்தேக்க திறனை அதிகரிக்கும் திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒரு நாளுக்கான நீா் சேமிப்பு திறன் உள்ள நிலையில், அதை 2-3 நாள்களுக்கு உயா்த்த திட்டமிட்டுள்ளோம். மேலும், முனாக் ரெகுலேட்டரில் இருந்து ஹைதா்பூா் வரை 1,050 கியூசெக் நீரை கொண்டு செல்லும் பிரதான குழாய் அமைப்பதற்கான முன் சாத்திய ஆய்வை ஐஐடி-ரூற்கி மேற்கொள்ள தில்லி ஜல் போா்டு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.7,240 கோடியாக கணிக்கப்பட்டுள்ளது என அமைச்சா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.