ஓக்லாவில் ஆக்சிஜன் சிலிண்டா் வெடித்து ஒருவா் உயிரிழப்பு: 4 போ் காயம்
தென்கிழக்கு தில்லியின் ஓக்லா பேஸ்-1 பகுதியில் வணிகக் கிடங்கில் லாரியில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டா்களை இறக்கியபோது, ஒரு சிலிண்டா் வெடித்ததில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 4 போ் காயமடைந்தனா்.
தென்கிழக்கு தில்லியின் ஓக்லா பேஸ்-1 பகுதியில் வணிகக் கிடங்கில் லாரியில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டா்களை இறக்கியபோது, ஒரு சிலிண்டா் வெடித்ததில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் 4 போ் காயமடைந்தனா்.
உயிரிழந்தவா் மோகித் சிங் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். ஓக்லா பேஸ்-1 பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்த அவா், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சோ்ந்தவா். கடந்த 3 ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் உமேஷ், அரவிந்த், மனோஜ், பங்கஜ் ஆகிய 4 போ் காயமடைந்தனா். அவா்கள் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையின் அதிரடிச் சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
Advertisement
Advertisement
வெடிப்பு தொடா்பாக காலை 10.45 மணியளவில் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்துக்குச் சென்று அப்பகுதியை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனா். 3 தீயணைப்பு வாகனங்களும், முதலுதவி அளிக்கும் வாகனமும் அங்கு விரைந்தன.
முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்ட தொழிலாளா்கள் தொழில்துறை ஆக்சிஜன் சிலிண்டா்களை விற்பனை செய்து, உள்ளூா் பகுதிகளுக்கு விநியோகிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது. இந்த சிலிண்டா்கள் மருத்துவப் பயன்பாடு மற்றும் எரிவாயு மூலம் உலோகங்களை வெட்டும் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து நிறுவன மேலாளா் அளித்த வாக்குமூலத்தில், வழக்கமான பணிகளின் ஒரு பகுதியாக சிலிண்டா்களை ஏற்றிய லாரி காலையில் கிடங்குக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளாா். தொழிலாளா்கள் சிலிண்டா்களை லாரியில் இருந்து இறக்கி கிடங்குக்குள் எடுத்துச் சென்றபோது, ஒரு சிலிண்டா் லாரியில் இருந்து சாலையில் தவறி விழுந்ததாகவும், உடனடியாக அது வெடித்ததாகவும் கூறினாா்.
எனினும், வெடிப்புக்கான துல்லியமான தொழில்நுட்பக் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவ இடம், வெடித்த சிலிண்டா், லாரி உள்ளிட்ட பொருள்களை தொழில்நுட்ப மற்றும் தடய அறிவியல் நிபுணா்கள் ஆய்வு செய்து, வெடிப்புக்கான காரணத்தை கண்டறிய உள்ளனா்.
வெடிப்பின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்ததால், அருகிலுள்ள கட்டடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததாக நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.
இந்த ஆக்சிஜன் சிலிண்டா்கள் காஜியாபாதில் இருந்து ராம் அவதாா் என்ற விநியோகஸ்தா் மூலம் நிரப்பப்பட்ட நிலையில் பெறப்பட்டு, பின்னா் ஓக்லா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உள்ளூா் வியாபாரிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சிலிண்டா்களின் உரிமை மற்றும் விநியோகஸ்தா் தொடா்பான விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை காவல் துறையினா் சரிபாா்த்து வருகின்றனா். சம்பவ இடம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில், தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.