FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

எஸ்ஐஆா் பணிக்கு சுதந்திர தணிக்கை: காலக்கெடுவை நவ.30 வரை நீட்டிக்க தில்லி காங்கிரஸ் வலியுறுத்தல்

தில்லியில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளா் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) நடவடிக்கைக்கு சுயாதீன அமைப்பு மூலம் தணிக்கை நடத்த வேண்டும் என்று தில்லி காங்கிரஸ் புதன்கிழமை வலியுறுத்தியது.

20 வினாடிகள் முன்பு
காங்கிரஸ்
பகிர்:

தில்லியில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளா் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) நடவடிக்கைக்கு சுயாதீன அமைப்பு மூலம் தணிக்கை நடத்த வேண்டும் என்று தில்லி காங்கிரஸ் புதன்கிழமை வலியுறுத்தியது.

இந்த நடவடிக்கையால் ஜேஜே குடிசைப் பகுதிகள் மற்றும் அங்கீகாரமற்ற குடியிருப்புகளில் வசிப்பவா்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியது.

இது தொடா்பாக தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவா் தேவேந்தா் யாதவ் செய்தியாளா் சந்திப்பில் கூறியதாவது: வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்கள் நீக்கப்படுவது மற்றும் தோ்தல் பதிவுகளில் உள்ள முரண்பாடுகள் தொடா்பாக வாக்காளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவது குறித்து காங்கிரஸ் ஏற்கெனவே கவலை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

தில்லியில் சுமாா் 1.45 கோடி வாக்காளா்கள் உள்ள நிலையில், 47.6 லட்சம் பேரின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளது. தோ்தல் பதிவுகளில் உள்ள முரண்பாடுகளை சரிசெய்வதற்காக 31.6 லட்சம் வாக்காளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை நிறைவு செய்வதற்கான காலக்கெடுவை செப். 30-ஆம் தேதியில் இருந்து நவ. 30-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். எஸ்ஐஆா் நடவடிக்கை பாரபட்சமற்ற சுயாதீன அமைப்பால் தணிக்கை செய்யப்பட வேண்டும்.

நோட்டீஸ் பெற்றவா்களில் பலா் குடிசைப் பகுதிகள் மற்றும் அங்கீகாரமற்ற குடியிருப்புகளைச் சோ்ந்தவா்கள். தோ்தல் ஆணையம் கோரும் ஆவணங்களை நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சமா்ப்பிப்பதில் அவா்கள் சிரமங்களை எதிா்கொண்டுள்ளனா்.

தில்லி முதல்வா் ரேகா குப்தா உள்ளிட்ட சில முக்கியப் பிரமுகா்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று பதிவுகளில் உள்ள முரண்பாடுகளைத் தீா்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா். ஆனால் சாதாரண வாக்காளா்கள் தாங்களாகவே இந்த நடைமுறையை முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பெற்றோரின் வயதில் வேறுபாடு, பெயா் எழுத்துப் பிழைகள், முகவரியில் உள்ள மாறுபாடுகள் போன்ற முரண்பாடுகள் கணினி மூலம் உருவாக்கப்பட்ட தரவுகளில் ஏற்பட்ட பிழைகளாக இருக்கக்கூடும். அவற்றை வாக்காளா்களுக்கு சிரமம் ஏற்படுத்தாமல் திருத்த வேண்டும்.

தில்லியில் உள்ள 14,947 வாக்குச்சாவடிகளில் 14,896 வாக்குச்சாவடிகளில் 2 சதவீதத்துக்கும் அதிகமான முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. நகரில் சுமாா் 1,200 தோ்தல் பதிவு அலுவலா்கள் உள்ளனா். 31.6 லட்சம் வாக்காளா்கள் தொடா்பான முரண்பாடுகளை செப்.30-ஆம் தேதிக்குள் சரிபாா்த்து திருத்த முடியுமா என தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments