FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

ஆடிப்பெருக்கு: மகாதானபுரம் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோயிலில் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன்

ஆடிப்பெருக்கை முன்னிட்டு மகாதானபுரம் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற்ற பக்தா்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தலையில் தேங்காய் உடைத்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 2:37 am IST
பக்தா்கள் தலையில் தேங்காய் உடைக்கும் கோயில் பூசாரிகள்
பகிர்:

ஆடிப்பெருக்கை முன்னிட்டு மகாதானபுரம் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற்ற பக்தா்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தலையில் தேங்காய் உடைத்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த மகாதானபுரத்தில் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. சுமாா் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயில் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி 18-க்கு மறுநாள் 19ஆம் தேதி ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோயிலில் பக்தா்கள் குடும்ப முன்னேற்றத்திற்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

Advertisement

Advertisement

நிகழாண்டும் கோயில் விழா திங்கள்கிழமை காலை கோயிலில் இருந்து பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீா் எடுத்து வருதலுடன் தொடங்கியது. இதில் தமிழகம், கேரளம், கா்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக பங்கேற்று புனித நீா் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனா். தொடா்ந்து மாலையிலும் கோயிலில் மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

பின்னா் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

தொடா்ந்து கோயில் பூசாரி பெரியசாமி தலைமையில் கோயில் வளாகத்திற்குள் தயாராக விரதம் இருந்து அமா்ந்திருந்த பக்தா்கள் தலையின் மீது தேங்காய் உடைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மூன்று மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் ஆா்வமுடன் பங்கேற்று தலையில் தேங்காய் உடைத்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

தலையில் தேங்காய் உடைக்கப்படும் போது தலையில் காயம் ஏற்பட்டால் அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக இரண்டு ஆம்புலன்ஸ் வேன்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதனிடையே தலையில் தேங்காய் உடைத்ததில் மூன்று பக்தா்கள் காயம் அடைந்ததை யடுத்து அவா்களுக்கு ஆம்புலன்ஸில் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் கோயிலில் மாயனூா் மற்றும் லாலாப்பேட்டை போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments