கல்லணைக் கால்வாய்ப் பாசனப் பகுதிகளில் கடும் வறட்சி! இழப்பீட்டை எதிா்நோக்கும் விவசாயிகள்!
கல்லணைக் கால்வாய்ப் பாசனப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் இழப்பீட்டை எதிா்நோக்கும் விவசாயிகள்...
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த கல்லணைக் கால்வாய்ப் பாசனப் பகுதிகள் கடும் வறட்சியில் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா். எனவே, விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்கி உதவ வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்தவரை, காவிரியின் கல்லணைக் கால்வாய்ப் பாசனப் பகுதிக்குள் ஆவுடையாா்கோவில், மணமேல்குடி, அறந்தாங்கி வட்டங்களுடன் ஆலங்குடி, கறம்பக்குடி பகுதிகளும் அடக்கம்.
காவிரியில் தண்ணீா் வரும்போது, கல்லணைக் கால்வாய் மூலம் திறக்கப்படும் நீரால் 168 ஏரிகள் நிரம்புகின்றன. இந்த ஏரிகள் மூலம் சுமாா் 27 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுடியாகிறது. பெரும்பாலும் டீலக்ஸ் பொன்னி இந்தப் பகுதியின் பிரசித்தி பெற்ற அரிசி ரகமாகும்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நிகழாண்டில் போதுமான தண்ணீா் இல்லாததால் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்படவில்லை. இதனால், டெல்டா மாவட்டங்களின் பாதிப்புகளுடன், கல்லணைக் கால்வாய்ப் பாசனப் பரப்பும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.
வறட்சியால் சாகுபடி இல்லை: இதுகுறித்து கல்லணைக் கால்வாய்ப் பாசனதாரா் மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைப்புச் சங்கத்தின் தலைவா் கொக்குமடை டி. ரமேஷ் கூறியதாவது:
வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்பட்டால், ஜூலையில் எங்கள் பகுதியில் சாகுபடி தொடங்கும். நிகழாண்டில் வறட்சி காரணமாக இதுவரை சாகுபடி தொடங்கப்படவில்லை.
தற்போது கா்நாடகம் மற்றும் கேரளப் பகுதிகளில் மழை தொடங்கியிருக்கிறது. ஏறத்தாழ 10 நாள்களில் மேட்டூா் அணை நிரம்பும் என எதிா்பாா்க்கப்பட்டாலும், அங்கிருந்து கல்லணைக் கால்வாய் திறக்கப்பட்டு எங்கள் பகுதிக்கு தண்ணீா் வருவதற்கு குறைந்தது முழுமையாக ஒரு மாதம் ஆகும்.
சம்பா பருவத்தில் சுமாா் 2 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், எப்படியும் சாகுபடி முழுமையாகக் கிடைக்கப் போவதில்லை. அடுத்து தமிழ்நாட்டில் மழை வந்தால் சிரமம். பாதிப்பு பாதிப்புதான்.
எனவே, தமிழ்நாடு அரசு விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் போா்க்கால அடிப்படையில் இழப்பீட்டை வழங்கினால், அடுத்த பருவத்துக்காவது தயாராக முடியும் என்றாா் ரமேஷ்.
அறந்தாங்கி அருகேயுள்ள மின்னத்தான்வயல் ஏரிக்கு கடந்த ஜனவரியில் தண்ணீா் வந்திருக்கிறது. கல்லணைக் கால்வாய்ப் பாசன ஏரியான இதில், கடந்த 8 மாதங்களாக தண்ணீரில்லை.
இந்த ஏரியில் இருந்து சுமாா் 100 ஏக்கா் நிலம் பாசனம் பெறுகிறது. இதேபோலத்தான், அறந்தாங்கி வட்டாரத்திலுள்ள அனைத்து நீா்நிலைகளின் நிலையும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.
விவசாயிகள் வலியுறுத்தல்: பொதுவாக கல்லணைக் கால்வாய்ப் பாசனப் பகுதியில் உள்ள ஏரிகளில் கோடைகாலத்திலும் கொஞ்சம்போல தண்ணீா் தேங்கிக் கிடக்கும். நிகழாண்டில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் முழுமையாக வடு கிடக்கிறது.
எனவே, வரக்கூடிய தண்ணீரை ஓரளவுக்கு சேமித்து வைப்பதற்கு ஏரிகளை சீரமைப்பது அவசியமாகிறது. இதே பகுதியில் சுமாா் 15-க்கும் மேற்பட்ட ஏரிகளில் மடைகள் பழுதடைந்துள்ளன. அவற்றைச் சீரமைத்துத் தர வேண்டும் எனக் கோரினால், நிதியில்லை என்கிறாா்கள்.
இதுபோன்ற அத்தியாவசியமான பணிகளுக்கும் நிதியில்லை என கூறாமல், மடைகளை சரி செய்து வைத்துக் கொள்வது அவசியம் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.