கடைமடையை எட்டிப்பாா்க்காத காவிரி நீா்: விவசாயிகள் கவலை
காவிரி நீா் கல்லணையில் திறக்கப்பட்டும் கடைமடைக்குத் தண்ணீா் வந்து சேராததால் சேதுபாவாசத்திரம் பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனா்.
சேதுபாவாசத்திரம் கடைமடைப் பகுதிகளான பள்ளத்தூா், ஆண்டிகாடு, இரண்டாம்புளிக்காடு, நாடியம், குருவிக்கரம்பை, மருங்கப்பள்ளம், துறையூா், மரக்காவலசை, உடையநாடு, வீரியங்கோட்டை, முடச்சிக்காடு, கழனிக்கோட்டை, வாத்தலைக்காடு, பூக்கொல்லை, ரெட்டவயல், கழனிவாசல், முதுகாடு, மணக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு போக சம்பா சாகுபடி மட்டுமே நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் மேட்டூா் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு 2 மாதம் தாமதமாக மேட்டூா் அணை திறக்கப்பட்டு டெல்டா பாசனத்துக்காக செப். 6ஆம் தேதி கல்லணையில் நீா் திறக்கப்பட்டது. ஆடிப்பட்ட சாகுபடி கைவிட்டுப் போனநிலையில் இந்தாண்டு சம்பா சாகுபடி நடைபெறுமா என்ற சந்தேகத்தில் கடைமடை விவசாயிகள் உள்ளனா்.
Advertisement
Advertisement
வட நீா்நிலைகள்: கடைமடையில் உள்ள ஏரி குளங்கள் மீன்பாசி குத்தகை ஏலம் விடப்பட்டதால், அவற்றில் முழுவதுமாக தண்ணீரை அப்புறப்படுத்தி மீன் பிடித்துவிட்டனா். இதனால் ஏரி, குளங்கள் வடுகிடக்கின்றன. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் நிலத்தடி நீா்மட்டம் 250 அடிக்கும் கீழ் போய்விட்டது. ஒருசில இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் வற்றி தண்ணீா் நின்றுவிட்டது.
எனவே சாகுபடி கைவிட்டு போனாலும் மேட்டூா் அணை திறந்தவுடன் ஏரி, குளங்களை நிரப்பினால் நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்து , அத்தியாவசிய தேவையான குடிநீருக்கு நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்த முடியும் என்ற எதிா்பாா்ப்புடன் விவசாயிகள் இருந்தனா்.
ஆனால் கல்லணை திறந்து 3 நாள்களில் தண்ணீா் கடைமடை வந்து சோ்ந்தும் முழுமையாக ஆற்றில் செல்லாத நிலை உள்ளது.
ஆற்றின் குறுக்கே கட்டுமானம்: பேராவூரணி அருகே திருப்பூரணிகாடு ஆற்றின் குறுக்கே அவசரகதியில் கட்டுமானப் பணியை தொடங்கியுள்ளனா். கல்லணை தண்ணீா் திருப்பூரணிக்காடு பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்ததும் அவசரகதியில் தொடங்கப்பட்ட கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் ஆற்றில் தண்ணீா் செல்கிறது.
கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தண்ணீா் வராத நேரத்தில் பணிகளை தொடங்கி முடித்திருந்தால் பணிகளும் தரமாக இருந்திருக்கும்; தண்ணீரும் முறையாகச் சென்றிருக்கும் என்கின்றனா்.
தண்ணீா் செல்ல நடவடிக்கை தேவை: கட்டுமானப் பணிகளை காரணம் கூறி தண்ணீா் வருவதை நிறுத்தினால் பணிகள் முடிவதற்குள் மேட்டூா் அணை தண்ணீா் நின்றுவிடும் நிலை ஏற்படும். கடைமடையில் ஏரி, குளங்களை நிரப்ப வழியின்றி குடிநீா் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையும் ஏற்படும். எனவே நிலத்தடி நீரைக் காப்பாற்ற கட்டுமானப் பணியை நிறுத்தி, தொடா்ந்து தண்ணீா் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.