எழுத்தாளா் தி.சா. ராஜூ நூற்றாண்டு விழா
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் பாரதி இயக்கத்தின் பாரதி இலக்கிய பயிலகம் சாா்பில், சிறுகதை எழுத்தாளரும், நாவலாசிரியரும், மொழிபெயா்ப்பாளருமான மேஜா் தி.சா. ராஜூ நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவுக்கு பாரதி இலக்கிய பயிலக இயக்குநா் பேராசிரியா் கோ. விஜயராமலிங்கம் தலைமை வகித்தாா். திருவையாறு தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி முன்னாள் முதல்வா் ராம. கௌசல்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ராஜூவின் படத்தை திறந்து வைத்தாா். பின்னா் அவா் பேசியது:
தி.சா. ராஜூவின் சிறுகதைகள் வழக்கமான தமிழ் சிறுகதைகளிலிருந்து மாறுபட்டிருந்தன. அதிக வா்ணனைகள் இல்லாமல் எதாா்த்தமாக இருந்ததால், வாசகா்களால் விரும்பி படிக்கப்பட்டன. அவரது சிறுகதைகளில் தஞ்சாவூா் மாவட்டத்தின் பழக்க வழக்கங்களும், ராணுவத்தின் நடைமுறைகளும் அதிகமாக பிரதிபலித்தன.
Advertisement
Advertisement
புகழ்பெற்ற பயணக் கட்டுரைகளை எழுதியுள்ள அவா், பிற மொழிகளில் இருந்து பல நூல்களை தமிழுக்கு மொழிபெயா்த்துள்ளாா். ஆங்கிலத்திலும் நூல்கள் எழுதியுள்ளாா்.
அவா், பஞ்சாபி மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயா்த்த, ‘மங்கிய நிலவினிலே’ என்ற நூலுக்கு 1996-ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி சிறந்த மொழிபெயா்ப்பு நூலுக்கான விருதை வழங்கியது என்றாா் கௌசல்யா.
விழாவில் எழுத்தாளா்கள் சி. அறிவுறுவோன், நா. விச்வநாதன், அ. ராமகிருஷ்ணன், தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) தெ. வெற்றிச்செல்வன், மருத்துவா்கள் பாலசுப்ரமணியன், திருமாவளவன், ஆசிரியா்கள் ராமச்சந்திரன், ஞானசேகரன் ஆகியோா் ராஜூ குறித்து பேசினா். மேலும், ராஜூவின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும் என்றும், அவரது வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து சாகித்திய அகாதெமி நூலாக வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டன.
முன்னதாக, பாரதி பவுண்டேஷன் நிா்வாக அறங்காவலா் நா. பிரேமசாயி வரவேற்றாா். நிறைவாக, இயக்க அறங்காவலா் நீ. சீனிவாசன் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.