FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆளுநர் ஆய்வு

புதுச்சேரி  கோரிமேடு மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

புதுச்சேரி  கோரிமேடு மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆளுநர் கிரண் பேடி வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கள ஆய்வு மேற்கொள்வதுடன், ஆளுநர் மாளிகைக்கு வரும் புகார்களின் அடிப்படையில், அவ்வப்போது அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், கோரிமேடு மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை இயக்கக ஊழியர்கள் மருத்துவமனை மற்றும் கல்லூரியை இயக்குவதற்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்கவில்லை என்றும், அத்தியாவசிய மருந்துகளைக்கூட வழங்க முடியவில்லை என்றும் ஆளுநருக்கு புகார் அனுப்பினர்.
மேலும்,  இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை, கடந்த ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 2 மாதங்களுக்கான முழு ஊதியமும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து, ஆளுநர் கிரண் பேடி அரசு பல் மருத்துவக் கல்லூரிக்கு புதன்கிழமை சென்று ஆய்வு செய்தார். 
அங்கு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து,  நிர்வாகப் பிரிவு கட்டடத்துக்கு சென்று உதவிப் பதிவாளர் அறையில் இருந்த கோப்புகளை ஆய்வு செய்தார்.  பின்னர் பேராசிரியர்கள், ஊழியர்கள் தங்களுக்கு ஊதியம் வழங்கப்படாதது குறித்து ஆளுநரிடம் தெரிவித்தனர். அவர்களிடம் பேசிய ஆளுநர் கிரண் பேடி, இருக்கும் நிதியைக் கொண்டு  மருத்துவமனையைச் சிறப்பாக நடத்த வேண்டும், தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். எனினும், ஆளுநர் கிரண் பேடி நிதி ஒதுக்கீடு குறித்து எந்த உறுதிமொழியையும் அளிக்காமல்  அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால், மருத்துவர்கள்,  ஊழியர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதுகுறித்து பல் மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் சிலர் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக இந்த மருத்துவமனைக்கு தேவையான நிதியை அரசு ஒதுக்கவில்லை. இதனால்தான் ஆளுநரிடம் புகார் அளித்தோம். அவர் ஆய்வு செய்ய வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனால், ஆய்வுக்குப் பின்னர் ஆளுநரும் நிதி ஒதுக்குவது தொடர்பாக எதுவும் கூறவில்லை. எனவே, அவர் பெயரளவுக்கு ஆய்வு மேற்கொண்டதாகவே கருதுகிறோம். 
ஆளுநரின் ஆய்வு எங்களுக்கு ஏமாற்றமளித்துள்ளது.  பல் மருத்துவக் கல்லூரியின் தற்போதைய நிதி நிலைமையே நீடித்தால், தொடர் போராட்டத்தில் இறங்குவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments