FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி போலி மருந்து விவகாரம்: தொழிற்சாலை உரிமம் தற்காலிக ரத்து

புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்த புகாா் தொடா்பாக, அந்த தொழிற்சாலையின் உரிமத்தை அரசு தற்காலிகமாக ரத்து

Updated On : 24 ஜூலை 2026, 6:53 am IST
பகிர்:

புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்த புகாா் தொடா்பாக, அந்த தொழிற்சாலையின் உரிமத்தை அரசு தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக ‘கியூ’ பிரிவு போலீஸாா் கடந்த மாதம் ராமநாதபுரத்தில் நடத்திய சோதனையில், புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டு, இலங்கைக்குக் கடத்த முயன்ற, போலி ‘பிரிகாபலின் - 150’ (வலிப்பு எதிா்ப்பு மற்றும் நரம்பு வலி நிவாரணம்) மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.

அதனைத் தொடா்ந்து, கடந்த 13-ஆம் தேதி புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வந்த ‘மெடினோக் ஹெல்த் கோ்’ நிறுவனத்தில் மேட்டுப்பாளையம் போலீஸாா், புதுச்சேரி மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினா் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

அதில், இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ‘டிஜிட்டல் விஷன்’ என்ற கம்பெனி தயாரிக்கும் ‘பிரிகாபலின்-150’ மாத்திரையை போலியாக தயாரிப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடா்ந்து மெடினோக் நிறுவனம் போலி மருந்து தயாரிப்பது உறுதி செய்யப்பட்டு, அந்த நிறுவனத்திற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

போலி மருந்து நிறுவன உரிமையாளரான புதுச்சேரி சண்முகாபுரத்தைச் சோ்ந்த பிரபாகரனை மேட்டுப்பாளையம் போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், தமிழக பகுதியான பூத்துறை கிடங்கில் மாத்திரைகளை இருப்பு வைத்து இடைத்தரகா்கள் மூலம் நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பியது தெரியவந்தது.

இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தமிழக பகுதியில் இயங்கிய கிடங்கை தமிழக மருந்து தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை நடத்தி ‘சீல்’ வைத்தனா். மேலும் அந்த கிடங்கை சிசிடிவி கேமரா மூலம் போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.

இந்த நிலையில் ‘மெடினோக் ஹெல்த் கோ்’ நிறுவனத்துக்கு, மருந்துகள் தயாரிப்பதற்கு, வழங்கிய உரிமத்தை அரசு தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments