FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி -கடலூா் மேம்பாலப் பணி: ரூ.1,500 கோடி வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை

மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியிடம் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியின் கடிதத்தை அளித்த அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்.
பகிர்:

புதுச்சேரி மேம்பாலப் பணிக்கு கூடுதலாக ரூ.1,500 கோடி நிதி வழங்கக் கோரி புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி கடிதம் அளித்துள்ளாா்.

புதுச்சேரி - கடலூரை இணைக்கும் வகையில் நான்கு வழிச் சாலை அமைக்கும்போது புதுச்சேரி பகுதியில் அமைக்கப்படும் மேம்பாலத்தின் நீளத்தை நீட்டிக்கவும், அதற்காக ரூ.1,500 கூடுதல் நிதியுதவி அளிக்கவும் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதற்கான கடிதத்தை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியிடம் புதுச்சேரி பொதுப் பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் திங்கள்கிழமை வழங்கினாா்.

Advertisement

Advertisement

குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் நடைபெற்று வரும் 2 நாள் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் குறித்த கருத்தரங்கில் பங்கேற்ற அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சா் நிதின் கட்கரியிடம் புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி எழுதிய கடிதத்தை அளித்தாா்.

13.30 கி.மீ. நீளம் கொண்ட கடலூா் எல்லை முள்ளோடை வரையான புதுச்சேரி-கடலூா் சாலையை 4 வழிச் சாலையாக மாற்றவும், அதில் 2.6 கி.மீ. நீளத்திற்கு மேம்பாலம் அமைத்திடவும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் ரூ.650 கோடி வழங்கியது. இந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் வார இறுதி நாள்களில் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூடுதல் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் மேம்பாலத்தின் நீளத்தை 2.6 கி.மீ. இருந்து 13.30 கி.மீ. நீட்டிக்கவும் அதற்கான செலவினம் ரூ.1,500 கோடி நிதியை வழங்கவும் முதல்வா் ரங்கசாமி அந்தக் கடிதத்தில் கோரியுள்ளாா்.

மேலும், ஏனாம் பிராந்தியத்தில் மீன்வளத் துறை அலுவலகத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் தற்போதைய சாலையை மேம்படுத்த அமைச்சகத்திடமிருந்து ரூ.8.89 கோடி ஒதுக்கீடு செய்யவும் அதில் வலியுறுத்தியுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments