அருண்ராஜா காமராஜ் படம் கைவிடப்பட்டது ஏன்? விஷ்ணு விஷால் விளக்கம்!
நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உடனான படம் கைவிடப்பட்டது குறித்து...
நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உடனான திரைப்படம் கைவிடப்பட்டது ஏன் என அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
கனா என்ற திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் அருண்ராஜா காமராஜ். பின்னர், நெஞ்சுக்கு நீதி, லேபிள் என்ற இணையத்தொடரையும் இயக்கினார்.
விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்துக்குப் அருண்ராஜா காமராஜ் உடன் புதிய படம் எடுக்கவிருப்பதாக தகவல் வெளியானது.
Advertisement
Advertisement
பின்னர், இந்தப் படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவின. இந்த நிலையில், விஷ்ணு விஷால் தயாரிப்பாளராக இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த சில நாள்களாக, இயக்குநர் அருண்ராஜா காமராஜுடன் நான் அடுத்ததாக பணியாற்றவிருந்த படம் குறித்து பல்வேறு தகவல்களும், யூகங்களும் வெளியாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில், உண்மையில் என்ன நடக்கிறது என்பதை ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் தெளிவுபடுத்துவது எனது கடமை என்று நினைக்கிறேன். அவர்களும் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்தப் படத்தை கடந்த ஒரு வருடமாக மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கடந்த பத்து மாதங்களாக இந்தப் படத்திற்காக தீவிரமாக தயாராகியும் வந்தேன். கட்டா குஸ்தி 2 படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு இந்தப் படத்தின் பணிகளைத் தொடங்க வேண்டும் என்பதே எனது திட்டமாக இருந்தது. இந்தப் படத்தை தொடங்க மிகவும் ஆர்வமாக இருந்தேன்.
ஆனால், சமீபத்தில் இந்தப் படத்தின் இயக்குநருடனான உருவாக்கம் ரீதியான கருத்து வேறுபாடுகள் மற்றும் பட்ஜெட் தொடர்பான சிக்கல்கள் ஆகியவை ஏற்பட்டன.
உண்மையில், தற்போது திரைத்துறை எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய சவால்களில் பட்ஜெட் பிரச்சினையும் ஒன்று என்பதை திரைத்துறையினர் அனைவரும் அறிவர். இந்தப் படத்தை சாத்தியமாக்க என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். ஆனால், எவ்வளவு முயற்சி செய்தும், இந்தப் படத்தை இனி தொடர வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இது எனக்கும் அருண்ராஜா காமராஜுக்கும் எளிதான முடிவு அல்ல என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இருந்தாலும், இந்தப் படத்திலிருந்து நாங்கள் இருவரும் விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவருடைய எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுதொடர்பான சட்ட நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகள், அதற்குரிய காலத்தில் நடைபெற்று முடிவுக்கு வரும்.
எப்போதும்போல, அடுத்து என்ன காத்திருக்கிறது என்பதை நினைத்து நான் உற்சாகமாக இருக்கிறேன். ஆனால், ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் என்ற பொறுப்பையும் ஏற்றிருக்கும் நிலையில், சில நேரங்களில் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இந்த முடிவும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.
தற்போது, எனது கவனம் எனது அடுத்த வெளியீடான 'இரண்டு வானம்' படம் மீதும், எனது சகோதரரின் Yellow Yellow Dirty Fellow' (யெல்லோ யெல்லோ டர்டி பெல்லோ) என்ற திரைப்படத்தின் மீதும் உள்ளது.
அதே நேரத்தில், மிகவும் சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமானமான ஒரு விஷயத்திலும் பணியாற்றி வருகிறேன். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மிக விரைவில் வெளியிடவுள்ளேன்.
தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இனி வரும் காலங்களிலும் அதே அன்பையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குவீர்கள் என்று நம்புகிறேன். - தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் எனக் கூறியுள்ளார்.
Why was Arunraja Kamaraj's film dropped? Vishnu Vishal explains!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.