FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பாரதியின் அன்பான வேண்டுகோள்

பாரதி பல்வேறு கோணங்களில் வைத்து மதிப்பிட வேண்டிய வைடூரிய வைரமாவார்.

13 வினாடிகள் முன்பு
பாரதியார் - கோப்பிலிருந்து...
பகிர்:

சீனி.விசுவநாதன்

பார் புகழும் பாரதி பல்வேறு கோணங்களில் கண்டு மகிழ வேண்டிய நிலையில், அவர் ஒரு கவிஞர் என்ற அளவில் மட்டுமோ- பத்திரிகையாளர், உரைநடை ஆசிரியர், மிகச் சிறந்த பேச்சாளர் என்ற அளவில் மட்டுமே நாம் அறிந்துள்ளோம்; அவர் ஒரு மிகச் சிறந்த தேச பக்தியும், தெய்வ பக்தியும் கொண்ட மாமனிதரும் ஆவார்.

சொல்லப் போனால், பாரதி பல்வேறு கோணங்களில் வைத்து மதிப்பிட வேண்டிய வைடூரிய வைரமாவார்.

Advertisement

Advertisement

'சுவை புதிது; நயம் புதிது; வளம் புதிது, சொற் புதிதும் கொண்ட ஜோதி மிக்க நவ கவிதைகளை வாரி வாரி வழங்கிய பெருமையும் பாரதிக்கே உரிமை.

இலக்கியத்துக்குத் தெளிவும், உண்மையுமே உயிரெனத் தேர்ந்து, திறமான படைப்புகளைப் படைத்துப் புகழ் சிறக்கச் செய்தவர் பாரதி என்பது எழுத்துலகம் கண்ட உண்மை.

'எழுத்தும் தெய்வம்; எழுதுகோலும் தெய்வம்' என்று கருதிக் காலத்தின் தேவை அறிந்து, தம்முடைய படைப்புகளைச் சிறக்கச் செய்தவர்களுள் பாரதிக்குள்ள 'ஸ்தானம்' வெறும் சொற்களால் அடக்கிக் காட்ட முடியாது.

பாரத நாடு முழுவதும் எழுச்சி பெற்ற தேசிய இயக்கத்துக்கு வலிவும், வனப்பும் கூட்டிய பாரதியின் அருமை-பெருமைகளை வார்த்தைகளால் வர்ணித்துக் காட்டிவிட முடியாது.

பாரத மணித் திருநாட்டின் பெருமை பேசும் பாடல்களை-மக்கள் நெஞ்சிலும், நாவிலும் என்றுமே நிலைக்கத்தக்க தேசியத் திருப்பாடல்களை ஒருங்கிணைத்துப் பதிப்பிக்கப் பாரதி திட்டமிட்டார்.

எனவே, பாரதி தம்முடைய ஆசை எண்ணத்தை 'விண்ணப்பம்' என்று தலைப்பிட்டு, 13.02.1906-ஆம் தேதிய 'சுதேசமித்திரன்' இதழில் வெளியிட்டார்.

பாரத சமுதாயத்தைப் பாடிப் பரவும் புனிதச் செயலில் ஈடுபட்ட பாரதியின் விண்ணப்ப அறிக்கையின் வாசகம் வருமாறு:

''எமது தாய் நாடாகிய பாரதாம்பிகையின் பெருமையை வருணித்து ஆங்கிலத்திலும், தமிழிலும் பல்வேறு காலத்துப் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்ற செய்யுள் மணிகளை ஓர் மாலையாகப் புனைந்து பதிப்பிக்கக் கருதியிருக்கிறேனாதலின் பண்டைத் தமிழ் நூல்களில் பாரத நாடு முழுதினையும் ஒருங்கே புகழ்ந்து கூறப்பட்டிருக்கும் பாடல்களை அறிஞர் தெரிந்தெடுத்து அனுப்புவார்களாயின் அவர்மாட்டு மிக்க கடமைப்பாடு உடையவன் ஆவேன்.

தமிழ்ப் புராணங்களிலும் இதிகாசங்களிலும், நாட்டுப் படலங்களில் நிடதம், கோசலம் முதலிய பகுதிகளைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் வருணனைகள் பயன்பட மாட்டா. தற்காலத்தே தமிழ்ப் புலமையில் சான்று விளங்கும் பெருமக்கள் புதியனவாக தேச பக்திப் பாக்கள் புனைந்து அனுப்புவராயின் அவையும் நன்றியறிவுடன் ஏற்றுக் கொள்ளப்படும். சிறிய ஆற்றல் உடையேன் ஆகிய நான் இப்பெரிய தொழிலை நிறைவேற்றுவதன் கண்ணே எவ்வாற்றானும் துணைபுரிய விரும்புவார் கால பரியயம் செய்யலாகாது என்று பிரார்த்திக்கிறேன்'' என்று தம்முடைய ஆசை- எண்ணத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

தேசாபிமானத்தை வளர்க்கக் கூடிய பாடல்களைப் பாரதி தாம் முன்னரே இயற்றி இருப்பினும், தமக்கு முன்னரே பல்வேறு புலவர்களால் பாடப் பெற்ற பாமணிகளை ஒருங்கிணைத்துப் பதிப்பிக்கக் கருதினார்.

ஆனால், பாரதி எதிர்பார்த்து நம்பியபடி- பாரத அன்னையின் புகழ் பேசும்- பெருமை அறிவிக்கும் பாமணிகளைத் தெரிந்தெடுத்தோ-புதியனவாகப் புனைந்தோ தமிழ்ச் சான்றோர்கள் முன்வந்ததாகத் தெரியவில்லை. தாம் எடுத்துக் கொண்ட பெருமுயற்சிக்கு எவரும் துணைபுரிய முன்வரவில்லை என்பதை உணர்ந்த பாரதி தாமே பாரத நாடு முழுதையும் ஒருங்கே புகழும் சுதேச பக்திப் பாடல்களைப் புனைந்தளிக்கும் திருப்பணியில் ஈடுபட்டார்.

எவ்வாறு தெய்வபக்தியுடன் வேத பாராயணங்களும், தேவார, திருவாசக, திவ்யப் பிரபந்த பாடல்களும் பாடப்பட்டனவோ, அவ்வாறே தேச பக்திப் பாடல்களும் பாடப் பட வேண்டும் என்பதைப் பாரதி வற்புறுத்தினார்.

அவர் வற்புறுத்திய அளவில் அமையாமல், தாமே தேதபக்திப் பாடல்களை இயற்றி மக்களை விழிப்படையச் செய்தார்.

தேசிய எழுச்சிக்கு வலிமை சேர்க்கும் வகையில் சரித்திரத் தொடர்பான செய்திகளையும் தம் பாடல்கள் வழியாகப் புலப்படுத்தினார்.

இவ்வாறாகப் பாரதி மேற்கொண்ட முயற்சிகளால் தமிழகத்தில் காலப்போக்கில் ஓரளவு தேசிய எழுச்சி ஏற்பட்டது என்பது உண்மை... உண்மை... உண்மையே ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments