முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

தேர்தல் 1980 : எதிர்பாராத முடிவு, மீண்டும் எம்ஜிஆர்!

1980 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நினைவுகள்... தினமணியின் கருவூலப் பக்கங்களிலிருந்து...

Updated On : 3 ஏப்ரல், 2026 at 4:00 AM
எம்ஜிஆர் உறுதிமொழியேற்க வந்த அண்ணா சிலை அருகே... - தினமணி கருவூலத்திலிருந்து...
பகிர்:

1980-ல் சட்டப்பேரவைக்கு நடைபெற்றது எதிர்பாராத தேர்தல், முடிவும்கூட எதிர்பாராததுதான்.

1977 மார்ச் மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைத்துப் போட்டியிட்டுப் பெரும் வெற்றி பெற்றாலும், இந்திரா காந்தியும் காங்கிரஸும் தோற்று, மத்தியில் ஜனதா ஆட்சி அமையவே, 1977 ஜூன் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் – அதிமுக கூட்டணி ஏற்படவில்லை;  தனித்தனியே போட்டியிட்டன. காங்கிரஸ் தோற்றது, மாநிலத்தில் அதிமுக ஆட்சியமைத்தது.

காங்கிரஸ் உறவை ஒதுக்கிவிட்டு மத்தியில் ஆட்சியிலிருந்த ஜனதா கட்சிக்கு ஆதரவான மனநிலையில் இருந்தார் எம்.ஜி.ஆர். இதனிடையே, 1978-ல் கர்நாடகத்தில் சிக்மகளூரில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு இந்திரா காந்தி எம்.பி.யானார். ஆனாலும், உரிமைப் பிரச்சினையில் கைது செய்யப்பட்டு எம்.பி. பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். எனினும், சட்டப் பாதுகாப்பு கருதி மீண்டும் எம்.பி.யாக விரும்பினார் இந்திரா.

அந்த நேரத்தில்தான் அதிமுக அமைச்சரவையில் அமைச்சராக எஸ்.டி. சோமசுந்தரம் பொறுப்பேற்றதால் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. பெரும் வெற்றி பெற்ற தமிழ்நாட்டிலுள்ள பாதுகாப்பான தொகுதி என்பதால் இங்கே போட்டியிட இந்திரா காந்தி விரும்பினார். சிக்மகளூரில் ஆதரித்த எம்ஜிஆர், தஞ்சையிலும் ஆதரிப்பதாக உறுதியளித்தார். ஆனால், தஞ்சையில் இந்திரா போட்டியிடுவது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவிருந்த கடைசி நேரத்தில் - இந்திரா காந்தி தமிழ்நாடு வரத் திட்டமிட்டிருந்த நாளுக்கு முந்தைய நாள் – தஞ்சையில் இந்திரா காந்தி போட்டியிடுவதால் ‘மோசமான சட்ட - ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம்’ என்று கூறி எம்ஜிஆர் பின்வாங்கிவிட்டார். ‘யாரை ஆதரிக்கப் போகிறீர்கள்? ஜனதா அரசையா, இந்திரா காந்தியையா?’ என்று எம்ஜிஆரை பிரதமர் மொரார்ஜி தேசாய் எச்சரித்ததாகவும் அதைத் தொடர்ந்துதான் இந்த நிலைமாற்றம் என்றும் கூறுவார்கள். இதனால், ‘கடுப்பான’ இந்திரா காந்தி தொடர்ந்து, ஆந்திரத்தில் மேடக்கில் போட்டியிட்டு எம்.பி.யானார். காங்கிரஸ் – அதிமுக உறவு ஒரேயடியாக முடிவுக்கு வந்தது. இதனால் ஏற்பட்ட எரிச்சலில் மீண்டும் திமுக – காங்கிரஸ் உறவு ஏற்பட்டது!

மத்தியிலிருந்த - ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம், லோக்தளம், சோசலிஸ்ட்களால் இணைந்து உருவாக்கப்பட்ட - ஜனதா கட்சி அரசில் பல்வேறு குழப்பங்கள், மோதல்கள். லோக்தளத் தலைவர் சரண் சிங் விலகி, காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமராகப் பதவியேற்றார்; எனினும், காங்கிரஸ் கழன்றுகொள்ள மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாதென முன்னதாகவே  ராஜிநாமா செய்தார்.  இதைத் தொடர்ந்து, மக்களவை கலைக்கப்பட்டு, 1980, ஜனவரியில் பொதுத் தேர்தல் நடத்த நேரிட்டது.

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி,  ஒட்டுமொத்தமாக வெற்றிகளை அள்ளிச் சென்றது. 39 தொகுதிகளில் 37-ல் வெற்றி. 20 தொகுதிகளில் இந்திரா காங்கிரஸும் 16 தொகுதிகளில் திமுகவும் ஒன்றில் முஸ்லிம் லீகும் வெற்றி பெற்றன. அதிமுக – ஜனதா – இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி. சிவகாசி, கோபிசெட்டிபாளையம் ஆகிய இரு தொகுதிகளில் மட்டும்தான் அதிமுக வெற்றி பெற்றது (எம்ஜிஆரின் இந்தப் படுதோல்விக்குக் கூட்டணி மட்டுமின்றி நிறைய காரணங்கள். தஞ்சையில் தொடங்கி ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியே நிறைய எழுதலாம்).

‘புதிய மத்திய அரசு, தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் செய்ய முற்படுமானால் சட்டசபை இடைக்காலப் பொதுத்தேர்தலைச் சந்திக்க அஇஅதிமுக தயாராக இருப்பதாக’க் கட்சியின் செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலர் வி.ஆர். நெடுஞ்செழியன் அறிவித்தார்.

மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வெற்றியுடன் மத்தியில் ஜன. 14-ல் பதவியேற்றது பிரதமர் இந்திரா காந்தியின் அரசு. சில நாள்களில் தில்லியில் பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்த முதல்வர் எம்ஜிஆர், மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு தரும் என்று உறுதியளித்தார். மத்தியில் ஒரு பலமுள்ள அரசுக்கு ஒத்துழைப்புத் தரும் தமது கட்சியின் கொள்கையில் மாற்றமில்லை என்றும் பின்னர் செய்தியாளர்களுடன் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

ஆனால், ‘எம்ஜிஆர் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார் என்பதையே மக்களவைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன, எனவே, மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்’ என்று திமுக தரப்பில் இந்திரா காந்திக்கு நெருக்குதல் தரப்பட்டது. ‘பொது எதிரியான’ எம்ஜிஆரைப் பதவியிலிருந்து அகற்றுவது இருவருக்குமே தேவையானதாகவும் இருந்தது.

நாட்டின் வேறு சில மாநிலங்களிலும் இதே நிலைமை. முடிவு, பிப். 17-ல் தமிழ்நாடு உள்பட இந்திரா காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத 9 மாநிலங்களில் (உத்தரப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், குஜராத், ஒடிசா, மகாராஷ்டிரம்) எதிர்க்கட்சிகளின் அரசுகளை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்தது (1977-ல் ஜனதா அரசு பதவியேற்றபோதும்கூட இதேபோல 9 மாநிலங்களின் அரசுகள் கலைக்கப்பட்டன!).

சில மாதங்களிலேயே சட்டப்பேரவைகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

1980, ஜனவரியில் கிடைத்த பெரிய வெற்றியின் காரணமாக, மே மாதத்தில் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி பிரமாண்ட வெற்றியைப் பெற்று ஆட்சியமைக்கும் என்ற எண்ணத்தில் தொகுதிப் பங்கீட்டிலேயே இழுபறி. பேச்சுவார்த்தைகளில் காங்கிரஸ் கை கொஞ்சம் ஓங்கியே இருந்தது (திமுக 112 தொகுதிகளிலும் காங்கிரஸ் 114 தொகுதிகளிலும் போட்டியிட்டன – எல்லாம் 45 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய கதை!!!).

வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி என்ற நிலையில் யார் முதல்வர்? யார் முதல்வர் வேட்பாளர் என்பதிலும் தெளிவின்மை நிலவியது. ஒருகட்டத்தில் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மு. கருணாநிதிதான் என இந்திரா காந்தியே அறிவித்துப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் (ஒருவேளை வென்றிருந்தால் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கலாசாரம் தொடங்கியிருக்கலாம்!). குறைந்தபட்ச வேலைத் திட்டமெல்லாமும்கூட அறிவிக்கப்பட்டது.

‘வளர்ச்சித் திட்டங்களைத் துரிதமாக நிறைவேற்ற மத்தியிலும் மாநிலங்களிலும் ஒரே கட்சி ஆட்சி முறை நல்லதென’ பிரதமர் இந்திரா காந்தி பேச, ‘பிரதமரின் யோசனை நடைமுறைச் சாத்தியமற்றது’ என்று எம்ஜிஆர் எதிர்வினையாற்றினார். ‘1977-ல் கிடைத்ததைவிட 10, 15 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் –திமுக கூட்டணி பதவிக்கு வந்தால் கருணாநிதிதான் முதல்வராகயிருப்பார் என்று இந்திரா காந்தி கூறியிருப்பதானது, உண்மையில் எனக்கும் என்னுடைய கட்சிக்கும் உதவியுள்ளது’ என்றும் கூறினார் அவர்.

எம்ஜிஆரின் அதிமுகவுடன் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகளான பழ. நெடுமாறனின் தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ், குமரி அனந்தனின் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், அகில இந்திய பார்வர்ட் போன்றவை மட்டுமே அணி சேர்ந்திருந்தன.

என்ன தவறு செய்தேன்? எதற்காக என்னுடைய ஆட்சியைக் கலைத்தார்கள்? என்பதைத் தேர்தல் பிரசாரத்தின் மையப்புள்ளியாக மாற்றினார் எம்ஜிஆர். ஏற்கெனவே, கடும் எதிர்ப்புக்கிடையே அறிமுகப்படுத்திய இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு (ரூ. 9 ஆயிரம்) திட்டத்தை (மக்களவைத் தோல்விக்கான காரணங்களில் ஒன்றெனக் கருதப்பட்டது) ரத்து செய்ததுடன், பேரவைத் தேர்தலுக்கு முன், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 31 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தித் தனக்கு சாதகமாக்கிக் கொண்டார் எம்ஜிஆர்.

அதிகாரத்துக்கு ஆசைப்பட்டு ஆட்சியை டிஸ்மிஸ் செய்தது சரியா? என்ற கேள்வி தேர்தலில் எதிரொலித்தது. எம்ஜிஆருக்கு ஆதரவாக அனுதாப அலை. மே 28 முதல் கட்டத்தில் 65% வாக்குப் பதிவு. மே 31-ல் 70 சதவிகிதம் வரையிலும் சென்றது (மதுரை மேற்கில் போட்டியிட்டார் எம்ஜிஆர்).

ஜூன் 1 வாக்குகள் எண்ணப்பட்டன. ஆட்சி கலைக்கப்பட்ட பிற மாநிலங்களில் இந்திரா காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் (பெரும் வெற்றி பெற்ற 5 மாதங்களிலேயே) இந்திரா காங்கிரஸ் – திமுக கூட்டணி தோற்றது! அதிமுகவுக்கு மெஜாரிட்டி! பிரமாண்டமான வெற்றி.

234 தொகுதிகளில் 129 தொகுதிகளில் அதிமுகவும் மார்க்சிய கம்யூ. 11, இந்திய கம்யூ. 10, காகாதேகா 6, காமராஜர் காங்கிரஸ் 3, பார்வரட் பிளாக் 3 தொகுதிகளிலும் வென்றன. திமுக 38 தொகுதிகளிலும் காங்கிரஸ் 30 தொகுதிகளிலும் வென்றன. திமுகவின் கோட்டை எனக் கருதப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் திமுக பல தோல்விகளைத் தழுவியது. எம்ஜிஆர் தேர்தல் பிரசாரத்துக்கே செல்லாத வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களிலும் செங்கல்பட்டு மாவட்டத்தின் சில பகுதிகளிலும்கூட அதிமுக குறிப்பிடத் தக்க வெற்றிகளைப் பெற்றது. 21 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் எம்ஜிஆர் வெற்றி பெற்றார்.

‘ஸ்திரமான மத்திய அரசை ஏற்படுத்த வேண்டும் என்னும் நோக்கத்துடன் லோகசபைத் தேர்தலில் தமிழக மக்கள் எவ்வாறு வாக்களித்தார்களோ, அதேபோல இப்போது மாநிலத்தில் ஸ்திரமான அரசு ஏற்பட வேண்டும் என்று மக்கள் வாக்களித்துள்ளனர்; தம்மிடமும் தமது கட்சி, தமது தோழமைக் கட்சிகளிடமும் மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதையும் இந்தத் தேர்தல் பிரதிபலித்துள்ளது’ என்று அறிக்கை வெளியிட்டார் எம்ஜிஆர்.

வெற்றிக்குப் பின் செய்தியாளர்களுடன் பேசினார் எம்ஜிஆர்:

“தமிழகத்தில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு காரணமாகத் தமிழக மக்கள் எப்படிப்பட்ட உணர்வுகளுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ளும். தமிழகத்தின் தேவையை அலட்சியப்படுத்தும் எண்ணம் மத்திய சர்க்காருக்கு இருக்காது. அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்படாது.

“இனி தமிழக அரசியலில் எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு இடமில்லை. அவருடைய இரண்டரை ஆண்டுகால ஆட்சி தமிழகத்தின் இருண்ட ஆட்சி என்று சொன்னார்கள். ஆனால், இந்தத் தேர்தலில் மக்கள் தமிழகத்தின் ஒளிமிக்க ஆட்சியை நடத்தக்கூடிய தகுதி, திறமை, ஆற்றல், அண்ணா வழிநடக்கும் அதிமுகவுக்கே உண்டு என்று தீர்ப்பளித்து எங்களுக்கு வெற்றி தேடிக் கொடுத்திருக்கிறார்கள்.

“மீண்டும் நடிப்பது என்பது இல்லை. நான் நடித்து வெளிவருவதாக இருந்த ‘இதுதான் பதில்’ திரைப்படம் வேறு நடிகர்களைக் கொண்டு தயாரித்து வெளியிடப்படும்.

“எனக்கென்று ஒரு தொழில் உள்ளது. அது நடிப்புத் தொழில். கலைத் துறை. ஆனால், மக்கள் என் மீது பெரும் நம்பிக்கை வைத்து இத்தேர்தலில் எங்கள் கட்சியை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றுவதும் அவர்கள் கொடுத்துள்ள பொறுப்பை ஒழுங்காகச் செய்து முடிப்பதையும்விட வேறு பெரிய வேலை எனக்கு எதுவுமில்லை. எனவே அதுதான் முக்கியம்” என்றார் எம்.ஜி.ஆர்.

இவ்வளவுக்கும் காரணமான இந்திரா காந்தி என்ன சொன்னார்?

லோகசபைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற இ. காங்கிரஸ், தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் தோல்வியுற்றதற்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு, “யார் மீதும் பழி சுமத்த முயல்வது பயனில்லை. இதற்கான பொறுப்பை எல்லோரும்தான் ஏற்க வேண்டும். இன்னார்தான் முதலமைச்சராக வருவார் என்று முன்கூட்டியே அறிவிக்கப்படாமலிருந்திருந்தால் ஒருவேளை உதவியாக இருந்திருக்கலாம்” என்று இந்திரா காந்தி பதிலளித்தார் (வெற்றி பெற்றால் கருணாநிதி முதல்வர் என அறிவிக்கப்பட்டிருந்தது).

1980, ஜூன் 9 – சென்னை கலைவாணர் அரங்கில் கோலாகலமாக நடைபெற்ற விழாவில், மீண்டும் முதல்வராக எம்.ஜி. ராமச்சந்திரன் பதவியேற்றார். உடன் 17 அமைச்சர்களும் பதவியேற்றனர். அனைவரும் ‘உளமார உறுதிகூறி’ பதவியேற்றுக்கொண்டனர் [விழாவுக்கு புதிய பேரவைக் கட்சித் தலைவர்களான அழகர்சாமி (இந்திய கம்யூ),  வரதராஜன் (மார்க்சிய கம்யூ), நெடுமாறன் (காமராஜர் காங்கிரஸ்) வந்திருந்தனர். உரிய முறைப்படி அழைப்பை அனுப்பவில்லை எனத் தெரிவித்து விழாவில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி உள்பட திமுகவினர் யாரும் பங்கேற்கவில்லை].

விழா முடிந்ததும் முதல்வர் எம்.ஜி.ஆரும் அமைச்சர்களும் அண்ணா சாலையிலுள்ள அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்தனர். திறந்த வேனில் வந்த எம்ஜிஆரைக் கண்டு மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பிறகு மக்களிடையே பேசிய எம்ஜிஆர், அண்ணாவின் சமுதாய நலக் கொள்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று அறிவித்ததுடன், அவற்றை அமல்படுத்த மக்கள் முன் தாம் உறுதிமொழி ஏற்பதாக அறிவித்தார்.

பதவியேற்பு விழாவைப் பார்க்க தமிழகம் முழுவதிலுமிருந்து 4 ஆயிரம் லாரிகள், 2 ஆயிரம் பஸ்கள், 700 வேன்கள், 600 கார்கள் மற்றும் ரயில்களின் கூரைகளில் எல்லாம் அமர்ந்து மக்கள் வந்திருந்தனர். கூரைகளில் இருப்பவர்களை ரயில் பெட்டிகளுக்குள் செல்லுமாறு செய்வது பெரும் பிரச்சினையாகவே ரயில்கள்  மணிக்கணக்காகத் தாமதமாயின. தெற்கேயிருந்து எழும்பூருக்குக் காலையில் வர வேண்டிய ரயில்கள் எல்லாம் பகல் 12 மணிக்குப் பிறகே வந்து சேர்ந்தன.

வெறும் திரைக் கவர்ச்சியால் வெற்றி பெற்றுவிட்டார்; இவரால் அரசாட்சியெல்லாம் நடத்த முடியாது என்றெல்லாம் விமர்சிக்கப்பட்ட எம்.ஜி.ஆரை, மக்களவைத் தேர்தலில் மிக மோசமான தோல்வி கண்ட எம்ஜிஆரை, ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட நிலையில், சில மாதங்களிலேயே  நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் அரியணையேற்றி வைத்தார்கள் மக்கள். 1985-ல்தான் அடுத்த தேர்தல் நடந்திருக்க வேண்டும், ஆனால், 1984-லிலேயே நடைபெற்றது. ஏன்? எதற்காக? 

[தினமணி கருவூலத்தின் பக்கங்களிலிருந்து]

summary

Memories of the 1980 Tamil Nadu Legislative Assembly Elections... From Dinamani Archives...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.