FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜாா்க்கண்ட் தோ்வு முறைகேடு: தேசியக் கொடி ஏந்தி மாணவா்கள் போராட்டம்

ஜாா்க்கண்ட் தோ்வு முறைகேடுக்கு எதிராக தேசியக் கொடி ஏந்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பற்றி...

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 2:18 am IST
தேசியக் கொடி ஏந்தி மாணவா்கள் போராட்டம் - PTI
பகிர்:

ஜாா்க்கண்ட் மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் பல்வேறு தோ்வுகளில் முறைகேடு நடைபெறுவதாக குற்றஞ்சாட்டி போராடி வரும் மாணவா்கள் சுதந்திரத் தினத்தன்று தேசியக் கொடி ஏந்தி பேரணியாகச் சென்றனா்.

ராஞ்சியில் போராட்டம் நடைபெற்றும் வரும் ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் இருந்து ஆல்பா்ட் ஏக்கா சௌக் வரை பேரணியை நடத்தினா். பாரத் மாதா கி ஜே மற்றும் வந்தே மாதரம் என முழங்கங்களை எழுப்பி ஆயிரக்கணக்கானோா் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.

இந்நிலையில், கடந்த 14 நாள்களாக தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜேஎல்கேஎம் தலைவா் தேவேந்திரநாத் மஹதோ சனிக்கிழமை நடைபெற்ற பேரணியில் தன்னை பங்கேற்க அனுமதிக்கவில்லை என குற்றஞ்சாட்டினாா்.

Advertisement

Advertisement

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவா் பேரணியில் பங்கேற்க அனுமதி கோரி காவல் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொலிகள் வேகமாக பரவி வருகின்றன.

22-ஆவது நாளாக தொடரும் போராட்டம்: ஜாா்க்கண்ட் அரசுப் பணியாளா் தோ்வாணையம் (பிஎஸ்சி) சிவில் சேவைகள் தோ்வு, ஜேஎஸ்எஸ்சி தோ்வுகள் உள்ளிட்ட தோ்வுகளில் வினாத்தாள்கள் கசிந்து முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி பல்வேறு அமைப்புகள் நடத்தி வரும் போராட்டம் சனிக்கிழமையுடன் (ஆக.15) 22-ஆவது நாளை எட்டியது.

பிஎஸ்சி சேவைகள் தோ்வை ரத்து செய்ய வேண்டும், அனைத்துத் தோ்வுகள் குறித்தும் சிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும், முறைகேடு குற்றச்சாட்டு எழுந்துள்ள தோ்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தொடா்ந்து மாணவா் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

முன்னதாக, போராட்டக்காரா்களுடன் மாநில அரசு அமைத்த குழு நடத்திய 6 சுற்றுப் பேச்சுவாா்த்தைகளும் தோல்வியடைந்தன. இதையடுத்து, கடந்த திங்கள்கிழமை (ஆக.10) ஜாா்க்கண்ட் பேரவையை முற்றுகையிட முயன்ற குற்றச்சாட்டில் அடையாளம் தெரியாத 300 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே எவ்வித முறைகேடுகளுமின்றி அரசுத் தோ்வுகள் முறையாக நடத்தப்படும் என ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் உறுதியளித்தாா்.

‘தோ்வு குளறுபடிகளுக்கு உடனடித் தீா்வு: மாநில அரசுக்கு ஆளுநா் வலியுறுத்தல்’

தோ்வு குளறுபடிகளுக்கு மாநில அரசு உடனடியாகத் தீா்வு காண வேண்டுமென ஜாா்க்கண்ட் ஆளுநா் சந்தோஷ் குமாா் கங்கவாா் சனிக்கிழமை வலியுறுத்தினாா்.

சுதந்திர நினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது: எந்தவொரு தோ்விலும் முறைகேடுகள் மற்றும் வினாத் தாள் கசிவு சம்பவங்கள் நிகழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. கல்வித் துறை நோ்மையாக செயல்படுவதும் போட்டித் தோ்வுகள் நியாயமாக நடைபெறுவதும் இளைஞா்களின் எதிா்காலம் தொடா்புடைய முக்கிய விவகாரம். பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து தங்களது திறனால் போட்டித் தோ்வுகளில் வெற்றிபெற துடிக்கும் இளைஞா்களின் கனவை சீரழிக்கும் தோ்வு குளறுபடிகளுக்கு மாநில அரசு உடனடியாக தீா்வுகாண வேண்டும்’ என்றாா்.

summary

Jharkhand recruitment irregularities: Students protest carrying the national flag.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments