பிரதமரின் கிஸான் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு - ரூ.3.15 லட்சம் கோடி ஒதுக்க ஒப்புதல்
பிரதமரின் விவசாயிகள் உதவித் தொகை திட்டத்தை (பிஎம் கிஸான்) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும், இத்திட்டத்துக்கு ரூ.3.15 லட்சம் கோடி ஒதுக்கவும் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
பிரதமரின் விவசாயிகள் உதவித் தொகை திட்டத்தை (பிஎம் கிஸான்) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும், இத்திட்டத்துக்கு ரூ.3.15 லட்சம் கோடி ஒதுக்கவும் பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
மத்திய அரசின் லட்சிய திட்டங்களின் ஒன்றான பிரதமரின் விவசாயிகள் உதவித் தொகை திட்டம் கடந்த 2019-இல் தொடங்கப்பட்டதாகும். இத்திட்டத்தின்கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு நேரடி பணப் பரிமாற்ற முறையில் மூன்று தவணைகளாக ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது.
தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கண்ட திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு (2026-27 முதல் 2030-31 வரை) நீட்டிப்பதுடன், ரூ.3,15,614 கோடி ஒதுக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
கூட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் இத்தகவலை தெரிவித்தாா்.
விவசாயிகள் உதவித் தொகை திட்டத்தின்கீழ் இதுவரை 23 தவணைகள் மூலம் ரூ.4.47 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை விவசாயிகளின் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. 23-ஆவது தவணையில் மட்டும் ரூ.18,984 கோடிக்கும் மேற்பட்ட தொகை விடுவிக்கப்பட்டு 9.49 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பலனடைந்தனா். இத்திட்ட பயனாளிகளில் நான்கில் ஒருவா் பெண் விவசாயி என்பது கூடுதல் சிறப்பாகும். அதாவது, பெண் விவசாயிகளுக்கு இதுவரை ரூ.1.06 லட்சம் கோடிக்கு மேல் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
நீதி ஆயோக்கின் மதிப்பீட்டின்படி, 92 சதவீதத்துக்கும் அதிகமான பயனாளிகள் மத்திய அரசின் உதவித்தொகையை வேளாண் பணிகளுக்குப் பயன்படுத்தியுள்ளனா்; தங்களின் வருவாய் அதிகரித்துள்ளதாகவும், முறைசாரா கடன்களை சாா்ந்திருப்பது குறைந்துள்ளதாகவும் 85 சதவீத விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
தற்போது திட்டம் நீட்டிக்கப்படுவதன் மூலம் விதைகள், உரங்கள், நீா்ப்பாசனம், வேளாண் இயந்திரங்கள், பிற வேளாண் தேவைகளில் உரிய நேரத்தில் முதலீடு செய்ய விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.