அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜிநாமா விவகாரம் தீர்க்கப்பட்டது: டி.கே. சிவகுமார்
கர்நாடகத்தில் அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் ராஜிநாமா விவகாரம் தீர்க்கப்பட்டதாக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்தது பற்றி...
கர்நாடகத்தில் அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் ராஜிநாமா விவகாரம் தீர்க்கப்பட்டதாக முதல்வர் டி.கே. சிவகுமார் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தின் முதல்வராக இருந்த சித்த ராமையா, காங்கிரஸ் மேலிட உத்தரவின்பேரில் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனையடுத்து, புதிய முதல்வராக டி.கே. சிவகுமார் கடந்த புதன்கிழமை (ஜூன் 3) பதவியேற்றார். அவருடன் 13 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, டி.கே. சிவகுமார் தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் குறித்த பட்டியல் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 4) வெளியானது.
Advertisement
Advertisement
துறை ஒதுக்கீட்டில் அதிருப்தி தெரிவித்த அமைச்சர் ராமலிங்க ரெட்டி வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தனது பதவியை ராஜிநாமா செய்தார். இவர் ராஜிநாமா செய்த நிலையில், மூத்த அமைச்சர்கள் சிலரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் திருப்தி இல்லை என்ற கருத்தை முன் வைத்தனர். பதவியேற்ற இரண்டு நாளிலேயே ராமலிங்க ரெட்டி ராஜிநாமா செய்த விவகாரம் பெரும் பேசுபொருளானது.
இந்த நிலையில், மூத்த தலைவரான ராமலிங்க ரெட்டியை தனது ராஜிநாமாவைத் திரும்பப் பெறுமாறு வற்புறுத்தி காங்கிரஸ் தலைமை முயற்சிகளை மேற்கொண்டது. இதனிடையே, முதல்வர் டி.கே. சிவகுமாரும் ராமலிங்க ரெட்டியும் ஜெயநகரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சந்தித்து சுமார் இரண்டரை மணி நேரம் உரையாடினர்.
இதன் பிறகு, செய்தியாளர்களிடம் டி.கே. சிவகுமார் பேசியதாவது:
இது ஒரு குடும்ப விவகாரம். நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசுவோம். அனைத்தும் தீர்க்கப்பட்டுவிட்டது.
ராமலிங்க ரெட்டி தனது குறையைத் தெரிவித்துள்ளார். கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது. ஏதோ நடைபெற்றுவிட்டது. நாங்கள் அதைச் சரிசெய்துவிடுவோம். கவலைப்பட வேண்டாம். நாங்கள் அனைத்து மூத்த தலைவர்களுக்கும் வாய்ப்புகளை வழங்கியுள்ளோம். எல்லாவற்றையும் நாங்கள் சரிசெய்வோம் என்று தெரிவித்தார்.
இது குறித்து ராமலிங்க ரெட்டி பேசும் போது, முதல்வர் என்ன சொன்னாரோ அதைத்தான் நானும் சொல்கிறேன். அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டுவிட்டன என்றார்.
மேலும், முதல்வர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தனது ராஜினாமாவைத் திரும்பப் பெறுவீரா என்று கேட்கப்பட்டபோது, ராமலிங்க ரெட்டி அதைப் பற்றி எதுவும் பேசாதது குறிப்பிடத்தக்கது.
Karnataka Chief Minister D.K. Shivakumar stated on Saturday that the issue regarding Minister Ramalinga Reddy's resignation has been resolved.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.