வரதட்சிணைக் கொடுமையா? போதைப் பழக்கமா? நொய்டா நடிகை மரணத்தில் தொடர் திருப்பங்கள்!
நொய்டா பெண்ணின் மரணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட திடீர் திருப்பங்கள் குறித்து...
21 ஆம் நூற்றாண்டின் செய்யறிவு (ஏஐ) காலத்தில் நாம் வாழ்ந்தாலும், நாட்டில் வரதட்சிணைக் கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களின் நிலையை சட்டமோ, செய்யறிவோ, பகுத்தறிவோ எதனாலும் சரிசெய்ய முடியாத அவலம் தொடர்கிறது!
மத்தியப் பிரதேசத்தில், வரதட்சிணைக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் திவிஷா சர்மா என்ற பெண்ணின் மரணம் பற்றிய வழக்கை மாநில அரசு சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்துள்ளது.
அந்தப் பெண் இறந்து 10 நாள்களே ஆகியிருந்தாலும், இந்த வழக்கு பல்வேறு கட்டங்களைக் கடந்து நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.
Advertisement
Advertisement
உத்தரப் பிரதேசத்தில் தில்லி அருகேயுள்ள நொய்டாவைச் சேர்ந்த 33 வயதான முன்னாள் மாடல் அழகியும், தெலுங்கு நடிகையுமான திவிஷா சர்மா, கடந்த 2024 ஆம் ஆண்டு ஆன்லைன் செயலி மூலம் சந்தித்த போபாலைச் சேர்ந்த வழக்குரைஞர் சாம்ராட் சிங்கைக் காதலித்து வந்தார்.
இருவீட்டாரின் சம்மதத்துடன் இருவருக்கும் கடந்த 2025 டிசம்பரில் திருமணம் நடைபெற்ற நிலையில், திவிஷா சர்மா 2 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில், போபாலின் கட்டாரா ஹில்ஸ் பகுதியிலுள்ள அவரது கணவர் வீட்டில், கடந்த மே 12 அன்று திவிஷா தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
உடனடியாக திவிஷாவை அவரது கணவர் சாம்ராட் சிங் மற்றும் அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், திவிஷாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, திவிஷா சர்மாவின் குடும்பத்தினரும், சாம்ராட் சிங்கின் தாயாரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான கரிபலா சிங்கும் தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கி வருகின்றன.
திவிஷாவின் மரணத்துக்கு, சாம்ராட் சிங் மற்றும் அவரின் குடும்பத்தினர் ரூ. 2 லட்சம் பணம் கேட்டு செய்த வரதட்சிணைக் கொடுமைதான் காரணம் என நொய்டாவைச் சேர்ந்த திவிஷாவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, சாம்ராட் சிங் மற்றும் அவரின் தாயார் மீது கடந்த மே 15 அன்று வரதட்சிணைக் கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திவிஷா வீட்டிலிருந்தபடியே செய்துவந்த வேலையை சமீபத்தில் இழந்ததால், சாம்ராட் சிங்கின் குடும்பத்தினர் அவரிடம் கடுமையான முறையில் நடந்துகொண்டதாகவும், தனது குடும்பத்தினருடன் நொய்டாவுக்கு திரும்பவே திவிஷா விரும்பியதாகவும் அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, மே 13 அன்று போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட உடற்கூராய்வு சோதனையின்படி, தூக்கிட்டதால் திவிஷாவின் உயிர் பிரிந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவரின் உடலில் பல இடங்களில் மரணத்துக்கு முன்பு ஏற்பட்ட காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அவர் தூக்கிட்டுக் கொண்டதாகச் சொல்லப்படும் நைலான் பெல்ட்டைக் காவல் துறையினர் ஒப்படைக்கவில்லை எனும் குற்றச்சாட்டுகள் எழுந்த பிறகே, அந்த பெல்ட்டைக் காவல் துறையினர் போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
இந்தச் சூழலில், சாம்ராட் சிங்கின் தாயார் ஓய்வுபெற்ற நீதிபதி என்பதால் அவர்களின் குடும்பத்துக்கு எதிராக அதிகாரிகள் முறையான விசாரணை மேற்கொள்ள மறுப்பதாகப் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, விசாரணையை வேகப்படுத்த அழுத்தங்கள் எழுந்தன.
மேலும், கிரிபலா சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட மே 15 அன்றே நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியது. இந்தப் பிணையை ரத்து செய்யுமாறு திவிஷாவின் தந்தை நவ்நிதி சர்மா ஜபல்பூரிலுள்ள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இத்துடன், தலைமறைவான திவிஷாவின் கணவர் சாம்ராட் சிங் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், அவரின் முன்ஜாமின் மனுவில் திவிஷா போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் எனவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது இணையவெளியில் கவனம் பெற்றது.
சாம்ராட் சிங்கைப் பிடிக்க சன்மானம்!
இருப்பினும், தலைமறைவான சாம்ராட் சிங்கைப் பிடிக்க பல்வேறு தனிப்படைகள் உருவாக்கப்பட்டு, ரூ. 10,000 சன்மானம் அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரைப் பிடிப்பது மிகவும் சவாலான ஒன்றாக மாறியதால், அந்த சன்மானத் தொகை ரூ. 30,000 ஆக அதிகாரிகளால் உயர்த்தப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணை மேற்கொள்ள காவல் துறையினர் சிறப்பு விசாரணைக் குழுவையும் அமைத்தனர்.
இந்த விசாரணை முறையானது அல்ல எனவும், திவிஷாவின் உடலை தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தலைமையில் மீண்டும் உடற்கூராய்வு சோதனை செய்யவேண்டுமென வலியுறுத்தி மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் வீட்டின் முன்பு திவிஷாவின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்ற போராட்டம் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியிலும் நடைபெற்றது.
புதிய திருப்பம் தந்த கிரிபலா சிங்கின் செய்தியாளர் சந்திப்பு!
இந்த நிலையில், கடந்த மே 18 அன்று செய்தியாளர்களுடன் பேசிய கிரிபலா சிங் முன்வைத்த சில குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் அதிர்ச்சியூட்டும் திருப்பமாக அமைந்தன.
இதுபற்றி, கிரிபலா சிங் கூறியதாவது:
“எல்லா குடும்பத்துக்கும் முதல் குழந்தை மிகவும் முக்கியமானது. ஆனால், அந்த சிறிய மகிழ்ச்சியைக்கூட அவர் (திவிஷா) எங்களுக்குத் தரவில்லை. மே 7 அன்று சாம்ராட் நீதிமன்றப் பணியில் இருந்தபோது அவரை செல்போனில் அழைத்த திவிஷா கருக்கலைப்பு மாத்திரைகளை உட்கொண்டதாகக் கூறினார்.
திவிஷா போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையானவர். போதைப் பொருள் உட்கொள்ளவில்லை என்றால் அவர் மிகவும் எரிச்சலடைந்து விடுவார். அதிகப்படியான போதைப் பொருளை உட்கொள்வதால், திவிஷாவே தன்னை மருத்துவச் சிகிச்சைக்கு அனுமதித்துக் கொண்டார்.
சத்யகாந்த் திரிவேதி எனும் மருத்துவரிடம் அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அவர் பரிந்துரைத்த மருந்துகளை திவிஷா உட்கொள்ளவில்லை. மேலும், தனக்கு குழந்தை வேண்டாமெனவும் திவிஷா தொடர்ந்து கூறி வந்தார்” என தனது தரப்பு குற்றச்சாட்டுகளை கிரிபலா சிங் முன்வைத்தார்.
கடந்த மே 20 அன்று முதற்கட்ட உடற்கூராய்வு அறிக்கையை முன்வைத்து, திவிஷா சர்மாவின் மரணம் தற்கொலைதான்; கொலை அல்ல என போபால் காவல் ஆணையர் தெரிவித்தார்.
இந்த விசாரணையில் நம்பக்கூடியதாக இல்லை எனக் குற்றம்சாட்டிய திவிஷாவின் குடும்பத்தினர், இரண்டாவது முறையாகத் தில்லி அல்லது ஜம்மு எய்ம்ஸ் மருத்துவர்களால் உடற்கூராய்வு சோதனை செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தி போபால் உயர் நீதிமன்றத்தில் கடந்த மே 20 அன்று தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.
இதில், திவிஷாவின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்க வேண்டுமென வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இதனால், இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய மத்தியப் பிரதேச அரசு பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து, சிறப்பு விசாரணைக் குழு இந்த வழக்கு குறித்த தங்களின் முழுமையான விசாரணை அறிக்கையை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதில், காவல் துறையினரின் விசாரணைக்கு கிரிபலா சிங் ஒத்துழைக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. விசாரணைக்கு ஆஜராகும்படி காவல் துறையினர் 3 முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்பட்டது. இதனால், அவருக்கு எதிரான விசாரணை மேற்கொள்ள மத்தியப் பிரதேச அரசே முன்வந்து உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை போபால் நீதிமன்றத்தில் இருந்து ஜபல்பூர் உயர் நீதிமன்றத்துக்கு, கடந்த மே 21 அன்று மாற்றப்பட்டது. மேலும், தலைமறைவாகவே இருந்த சாம்ராட் சிங், ஜபல்பூர் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தார். ஆனால், நீதிமன்றம் சாம்ராட் சிங்கை போபாலில் உள்ள விசாரணை நீதிமன்றம் அல்லது விசாரணை அதிகாரியிடம் சரணடையுமாறு உத்தரவிட்டது.
வெளியே வந்தார் சாம்ராட் சிங்!
இதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் தனது முன்ஜாமின் மனுவைத் திரும்பப் பெற்றதால், வேறு வழியின்றி சில மணிநேரங்களில் சாம்ராட் சிங், முகக் கவசம், கருப்பு கண்ணாடி அணிந்தவாறு, வெள்ளிக்கிழமை (மே 22) மாலை 5 மணியளவில் ஜபல்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைவதற்காக வந்தார்.
ஆனால், சாம்ராட் சிங் சரணடைய ஜபல்பூர் மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி அனுமதி மறுத்ததுடன், உயர் நீதிமன்ற உத்தரவின்படி அவரை போபால் நீதிமன்றத்தில் சரணடையுமாறு அறிவுறுத்தினார். இதனால், நீதிமன்ற வளாகத்திலேயே சுமார் 40 நிமிடங்கள் அமரவைக்கப்பட்ட சாம்ராட் சிங்கிடம் திவிஷா பெற்றோரின் வழக்குரைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க முயன்றதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இதையடுத்து, இந்த வழக்கு குறித்து தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான விசாரணைக்காக, ஜபல்பூர் நீதிமன்றம் வந்திருந்த போபால் காவல் துறையினர் சாம்ராட் சிங்கை காவலில் எடுத்து 315 கி.மீ. தொலைவிலுள்ள போபாலுக்கு அழைத்துச் சென்றனர். தற்போது காவலில் எடுக்கப்பட்ட சாம்ராட் சிங்கிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2 ஆவது உடற்கூராய்வு சோதனைக்கு அனுமதி
திவிஷாவின் பெற்றோரின் மனுவை ஏற்றுக்கொண்ட மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், அவரது சடலத்தை 2 ஆவது முறை உடற்கூராய்வு சோதனை செய்வதற்கு அனுமதியளித்துள்ளது. இதையடுத்து, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் போபால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து இந்தச் சோதனைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கெனவே, முதற்கட்ட உடற்கூராய்வு சோதனை முழுவதும் விடியோ பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தில்லி மருத்துவர்கள் தலைமையில் நடைபெறும் புதிய சோதனையையும் முழுவதுமாக விடியோ பதிவு செய்து ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
சாம்ராட் சிங்கின் தாயார் ஓய்வுபெற்ற நீதிபதி கிரிபலா சிங்கிற்கு வழங்கப்பட்ட முன் ஜாமினை ரத்து செய்யுமாறு மத்தியப் பிரதேச அரசு மற்றும் திவிஷா குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுக்களின் மீதான உயர் நீதிமன்றத்தின் விசாரணை வரும் மே 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த வழக்கில், பல்வேறு திருப்பங்களையும், பல அடுக்கு விசாரணைகளையும் கடந்து இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டாலும் கனவுகளுடன் வாழ்வைத் தொடக்கித் தற்கொலைக்குப் பலியான பல இளம்பெண்களைப் போல திவிஷாவின் வாழ்க்கையும் முடிந்துபோனதை மாற்ற முடியாது.
போதைப் பழக்கமோ, வரதட்சிணையோ மனித மனங்கள் உணர்ந்து திருந்தும் வரையில் இவற்றால் ஏற்படும் உயிர்ப் பலிகளின் எண்ணிக்கை குறைந்துவிடுமா என்ன?