மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கிடைக்கவிருக்கும் ஆதரவு எவ்வளவு?
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கிடைக்கவிருக்கும் ஆதரவு குறித்து...

மக்களவையில் திங்கள்கிழமை (நவ. 30) தாக்கல் செய்யப்படவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக உள்பட மேலும் சில கட்சிகள் ஆதரவளிக்கவுள்ளதால், மசோதா நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறையுடன் இணைக்கப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா திங்கள்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சியினரிடமும் தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) கட்சித் தலைவர்கள் ஆதரவுகோரி வருகின்றனர்.
543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் தற்போது 3 இடங்கள் காலியாக உள்ள நிலையில், என்டிஏ கூட்டணியில் 320 எம்.பி.க்களும், கூட்டணி அல்லாத மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 240 பேரும் உள்ளனர்.
Advertisement
Advertisement
நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்த மசோதா நிறைவேற்றப்பட மூன்றில் இரு பங்கு ஆதரவு தேவை. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறைக்கு போதிய வாக்குகள் கிடைக்காததால், மசோதா தோல்வியடைந்தது.
இதனைத் தொடர்ந்து, மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளிடம் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து தீவிரமாக ஆதரவுகோரி வந்தனர்.
இந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்), ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்சிபி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதன் மூலம் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை (நவ. 30) காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படவிருக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவாக ஏற்கெனவே தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் 320 பேர் உள்ள நிலையில், திமுகவில் 22 பேரும், தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியில் 8 பேரும், ஒய்எஸ்ஆர்சிபி கட்சியில் 4 பேரும் ஆதரவு அளிக்கவுள்ளனர். மொத்தமாக மசோதாவுக்கு 354 பேர் ஆதரவு தெரிவிக்க வாய்ப்புகள் உள்ளன. இருந்தபோதிலும், இன்னும் 6 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.