ஞானேஷ் குமார் பதவி விலகியாக வேண்டும்! அக்.10-ல் தில்லியில் போராட்டம்! - சிஜேபி அறிவிப்பு
தில்லி ஜந்தர் மந்தரில் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என சிஜேபி அறிவிப்பு...
ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி வரும் அக்.10 ஆம் தேதி தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தவுள்ளதாக, கரப்பான்பூச்சி மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைகளில், 2 தேர்தல் ஆணையர்கள் பல்வேறு முறை எதிர்ப்பு தெரிவித்தும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சட்டத்துக்கு எதிரான வகையில் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக வெளியான செய்திகள் நாட்டையே உலுக்கி வருகின்றன.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், அதில் முறைக்கேடுகள் நடைபெற்றிருக்கக் கூடும் என்பதால் நாட்டின் பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், அவர் மீது குற்றவிசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தி மும்பையில் உள்ள சிவாஜி பூங்கா பகுதியில் சிஜேபி தலைமையில் வெள்ளிக்கிழமை (அக்.2) மாலை நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலகவில்லை என்றால் வரும் அக்.10 ஆம் தேதி தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே அறிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,
“ஞானேஷ் குமார் பதவி விலகவில்லை என்றால் நாடு முழுவதுமுள்ள கரப்பான்பூச்சிகளும் (இளைஞர்கள்) தில்லியை நோக்கி படையெடுத்து வரும் அக்.10 ஆம் தேதி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவோம்.
தில்லி காவல்துறை எங்களைத் தடுத்தால், எங்களை எங்கே அவர்கள் தடுத்து நிறுத்துகிறார்களோ அந்த இடம் எங்களின் ஜந்தர் மந்தர் ஆகிவிடும்.
நாங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்துகிறோம். மகாத்மா காந்தி காட்டிய வழியில் நாங்கள் பயணிப்போம். அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான எங்களின் உரிமையை மதிப்பதா அல்லது ஜூலை 20 அன்று நாங்கள் கண்ட கொடூரத்தை (நீட் போராட்டத்தில் போலீஸார் நடத்திய தாக்குதல்) மீண்டும் நிகழ்த்துவதா என்பது அரசு மற்றும் தில்லி காவல் துறையின் கையில்தான் உள்ளது” எனக் கூறியுள்ளார்.
CJP has announced that it will stage a protest at Jantar Mantar in Delhi on October 10, demanding the resignation of Gyanesh Kumar.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.