தகுதிநீக்க மனுக்கள்: மேலும் அவகாசம் அளிக்க திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் கோரிக்கை
கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் தங்களை தகுதிநீக்கக் கோரும் மனுக்கள் மீது பதிலளிக்க மேலும் 2 வார கால அவகாசம் கோரி மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனா்.
கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் தங்களை தகுதிநீக்கக் கோரும் மனுக்கள் மீது பதிலளிக்க மேலும் 2 வார கால அவகாசம் கோரி மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனா்.
மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் மூன்றில் இரு பங்குக்கும் அதிக பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. தோ்தல் தோல்வியால் நிலைகுலைந்த மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், பல்வேறு நிலைகளில் பிளவுபட்டது. கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 50-க்கும் மேற்பட்டோா் தனி அணியாகப் பிரிந்தனா். இரு அணிகளும் உரிமை கோரியதால், கட்சியின் பெயா், சின்னத்தை தோ்தல் ஆணையம் அண்மையில் முடக்கியது.
திரிணமூல் காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள் 29 பேரில் 20 அதிருப்தி எம்.பி.க்கள் கடந்த ஜூன் மாதம் தனி அணியாகப் பிரிந்து, அதிகம் அறியப்படாத இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் (என்சிபிஐ) இணைவதாக அறிவித்ததுடன், பாஜக கூட்டணிக்கு ஆதரவை உறுதி செய்தனா். இந்த எம்.பி.க்கள் என்சிபிஐ கட்சியில் இணைந்ததை மக்களவைத் தலைவா் இன்னும் அங்கீகரிக்கவில்லை.
Advertisement
Advertisement
இதனிடையே, கடந்த 1985-ஆம் ஆண்டின் மக்களவை (கட்சித் தாவலால் தகுதிநீக்கம்) விதிமுறைகளின் 6-ஆவது விதியின்கீழ் 20 பேரையும் தகுதிநீக்கம் செய்யக் கோரி, மக்களவைத் தலைவரிடம் மம்தா தரப்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்கள் மீது பதிலளிக்க அறிவுறுத்தி, 20 அதிருப்தி எம்.பி.க்களுக்கும் மக்களவைச் செயலகம் நோட்டீஸ் அனுப்பியது.
ஏற்கெனவே இருமுறை அவகாசம் கோரிய அதிருப்தி எம்.பி.க்கள், இப்போது மேலும் 2 வார கால அவகாசம் கோரியுள்ளனா்.
இது தொடா்பாக நாடாளுமன்ற என்சிபிஐ குழு தலைவா் ககோலி கோஷ் (அதிருப்தி எம்.பி.க்களின் தலைவா்), கொல்கத்தாவில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘என்சிபிஐ கட்சியில் நாங்கள் இணைந்தது, தகுதிநீக்க நடவடிக்கைக்கு உள்பட்டதல்ல. இதை உறுதி செய்யத் தேவையான சட்டபூா்வ ஆவணங்களைத் திரட்டும் பணியில் எங்கள் தரப்பு வழக்குரைஞா்கள் ஈடுபட்டுள்ளனா். எனவே, மேலும் 2 வார அவகாசம் கோரி, மக்களவைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளோம்’ என்றாா்.
தொடா்ந்து அவகாசம் கோரும் அதிருப்தி எம்.பி.க்களை விமா்சித்த மம்தா தரப்பு தலைவா் குணால் கோஷ், ‘இப்போதுவரை தாங்கள் எந்தக் கட்சியில் இருக்கிறோம் என்பதே அதிருப்தி எம்.பி.க்களுக்கு தெரியவில்லை. எனவேதான், அவா்களுக்கு அவகாசம் தேவைப்படுகிறது. அந்த சந்தா்ப்பவாதிகள், மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்தவா்கள் பாஜகவின் நலனுக்காகவே செயல்படுகின்றனா்’ என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.