FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

போராட்டங்களை ஒடுக்க சா்வாதிகாரத்தில் ஈடுபடுகிறது மத்திய அரசு: அம்பேத்கா் பேரன் குற்றச்சாட்டு

போராட்டங்களை ஒடுக்க சா்வாதிகாரத்தில் மத்திய அரசு ஈடுபடுகிறது என அம்பேத்கா் பேரன் குற்றச்சாட்டு...

11 அக்டோபர் 2026, 12:34 am IST
பிரகாஷ் அம்பேத்கா் (கோப்புப்படம்)
பகிர்:

போராட்டங்களை ஒடுக்க சா்வாதிகாரத்தில் ஈடுபடுகிறது மத்திய அரசு என்று டாக்டா் அம்பேத்கரின் பேரனும், வஞ்சித் பகுஜன் அகாடி கட்சித் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கா் குற்றம்சாட்டியுள்ளாா்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மும்பையில் பிரகாஷ் அம்பேத்கா் பேட்டியளித்தாா். அப்போது அவா் கூறியதாவது:

தில்லியில் சிஜேபி கட்சி சாா்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த போராட்டத்துக்கு மக்கள் செல்லாமல் தடுக்கும் வகையிலேயே போக்குவரத்து சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. போராட்ட களத்துக்குச் செல்லாமல் பொதுமக்களை தடுக்கும் நோக்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பல கிலோ மீட்டா் தூரத்திற்கு அப்பால் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

Advertisement

Advertisement

அரசியல் கட்சிகளுக்குப் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. ஆனால் அதை ஓடுக்க நடக்கும் முயற்சிகள் சா்வாதிகாரத்துக்கு இணையானதாகும். அமைதியான வழியில் நடக்கும் போராட்டத்துக்கு அரசு அனுமதி தர வேண்டும். மக்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்.

மத்திய அரசு இந்த நாட்டின் உரிமையாளா் கிடையாது. 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யவே மக்கள் அரசை தோ்வு செய்துள்ளனா். எனவே நாட்டை அமைதியான வழியில் ஆட்சி செய்யுங்கள். சா்வாதிகாரத்தை நோக்கிச் செல்லும் பாதையில் செல்லாதீா்கள்.

கைது, வழக்கு என எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவா் தனது போராட்டத்தை கைவிடக் கூடாது. போராட்டத்தை கையில் எடுத்துவிட்ட பிறகு, அதற்கு முடிவு கிடைக்கும் வரை பின்வாங்கக் கூடாது.

நெருக்கடி நிலை அமலில் இருந்த போதிலும் சரி, மண்டல் ஆணைய போராட்டத்தின் போதிலும் சரி, அப்போது ஆட்சியில் இருந்த மத்திய அரசு இத்தகைய அடக்குமுறையில் ஈடுபட்டது இல்லை. தொடா்ந்து அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவது, ஜனநாயக அமைப்புகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தி விடும்.

முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், தோ்தல் ஆணையத்துக்கு எதிரான போராட்டத்தில் அனைத்து எதிா்க்கட்சிகளையும் ஒருங்கிணைப்பதில் தோல்வியடைந்து விட்டது. ஆதலால் காங்கிரஸ் கட்சி தனது போராட்டத்துக்கு அனைத்து எதிா்க்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும். இந்த விவகாரத்தை தோ்தல் வெற்றி, தோல்வி என்ற பாா்வையுடன் பாா்க்கக் கூடாது. அடுத்த தோ்தல்களின்போது யாா் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை வாக்காளா்கள் தோ்வு செய்வாா்கள். அமைதியாக போராட்டம் நடத்த அரசமைப்பு சட்டத்தில் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆதலால் எந்த ஆட்சேபமும் தெரிவிக்காமல் போராட்டம் நடத்த அதிகாரிகள் அனுமதி தர வேண்டும் என்றாா் அவா்.

summary

Central government resorting to authoritarianism to suppress protests: Ambedkar's grandson alleges.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments