ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!
ஒடிசா காவல்துறையின் சிறப்பு நடவடிக்கையால் 101 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஒடிசா காவல்துறை நடத்திய ‘ஆபரேஷன் அன்வேஷன்’ நடவடிக்கையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒடிசாவைச் சேந்த 101 குழந்தைகள் இரு வாரங்களில் மீட்கப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநில பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவு காவல்துறை மூலம் நடத்தப்பட்ட இந்தச் சிறப்பு நடவடிக்கையின் மூலம் 17 மாநிலங்களில் இருந்து ஒடிசாவைச் சேர்ந்த குழந்தைகள் மீட்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கைக்கென 17 குழுக்கள் அமைக்கப்பட்டு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் டிஎஸ்பி தர அதிகாரிகள் மூலம் தனித்தனியே வழிநடத்தப்பட்டனர். இந்தக் குழுக்கள் வெவ்வேறு மாநிலங்களுக்குச் சென்று 10 முதல் 12 நாள்கள் வரை தங்கியிருந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement
Advertisement
சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, ஆந்திரா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், பிகார், ஜார்க்கண்ட், ஹரியானா, உத்தரப் பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு, புது தில்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரம், குஜராத் மற்றும் கேரளம் போன்ற மாநிலங்களின் உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து செயல்பட்டு குழந்தைகளை மீட்டுள்ளனர்.
ஆபரேஷன் அன்வேஷன் நடவடிக்கையில் கடத்தல் வழக்குகளில் தேடப்பட்ட 9 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்களாகப் பணியமர்த்தப்பட்ட 1 பெண் மற்றும் 9 ஆண் குழந்தைகள், குழந்தைகள் நல்வாழ்வு மையத்தில் இருந்த 46 பெண் மற்றும் 37 ஆண் குழந்தைகள் என பல்வேறு சூழல்களில் குழந்தைகள் மீட்டு அழைத்து வரப்பட்டனர்.
இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான பல்வேறு வழக்குகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
மீட்கப்பட்டவர்களில் 3 மாதக் கைக் குழந்தையும் அடங்கும். குழந்தையின் தாயான சிறுமி ஒருவர் வேறொரு மாநிலத்தில் இருப்பதால் அவரையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
101 children have been rescued through a special operation by the Odisha Police.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.