2026-ன் முதல் 6 மாதங்களில்..! பாகிஸ்தானில் 1,900 குழந்தை வன்கொடுமை வழக்குகள்!
2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 1,900-க்கும் அதிகமான குழந்தை வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளது குறித்து...
பாகிஸ்தானில், 2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 1,900-க்கும் அதிகமான குழந்தை வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதாக, நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதில், 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் மட்டும் அந்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான 1,914 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளது என குழந்தைகள் பாதுகாப்பு தன்னார்வ அமைப்பான சாஹில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து, பாகிஸ்தானின் பலூசிஸ்தான், கைபர் பக்துன்குவா, பஞ்சாப், சிந்து, இஸ்லாமாபாத், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்கிட்-பல்டிஸ்தான் ஆகிய மாகாணங்களில் வெளியான நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்தத் தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் 2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 49 பச்சிளம் குழந்தைகள் சாலையில் கைவிடப்பட்ட வழக்குகள், 1,015 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்ட வழக்குகள், 558 கடத்தல் வழக்குகள், 101 குழந்தைகள் மாயமான வழக்குகள், பாலியல் வன்கொடுமையைத் தொடர்ந்து ஆபாசப் படங்கள் தொடர்பான 98 வழக்குகள் மற்றும் 35 குழந்தை திருமண வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இந்தக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களில் 58 சதவிகிதம் சிறுமிகள் எனத் தெரியவந்துள்ளது. 11-15 வயதுடைய 598 குழந்தைகள், 16-18 வயதுடைய 356 குழந்தைகள், 6-10 வயதுடைய 329 குழந்தைகள் மற்றும் 0-5 வயதுடைய 95 குழந்தைகள் இந்தக் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்துடன், இந்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்களில் 43 சதவிகிதம் குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதும், 34 சதவிகிதம் குற்றவாளிகள் மட்டுமே வெளிநபர்கள் என்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
more than 1,900 cases of child abuse were registered in Pakistan in the first six months of 2026 alone.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.