‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சதி’... மமதா பானர்ஜிக்கு ராகுல் ஆதரவுக்குரல்!
பாஜகவும் தேர்தல் ஆணையமும் கைகோத்து கட்சிகளைப் பிளவுபடுத்துவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காட்டம்.
பாஜகவும் தேர்தல் ஆணையமும் கைகோத்து கட்சிகளைப் பிளவுபடுத்துவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. மமதா பானர்ஜி தலைமையில் ஒரு பிரிவினரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரிதப்ரத பானர்ஜி தலைமையில் மற்றொரு பிரிவினரும் செயல்பட்டு வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்திடம் ரிதப்ரத பானர்ஜி பிரிவினர் சார்பில் தங்களுக்கே திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் பெரும்பாலானோரின் ஆதரவு இருப்பதாகக் கூறி, கட்சியின் சின்னத்துக்கு அரூப் ராய் உரிமை கோரினார். இதற்கு மமதா தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
அதைத்தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயர், 'பூக்கள் மற்றும் புல்' சின்னத்தைப் பயன்படுத்த மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான கட்சி பிரிவுக்கும், அதிருப்தி எம்எல்ஏக்கள் பிரிவுக்கும் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை தடைவிதித்தது.
இந்த நிலையில், மமதா பானர்ஜிக்கு ஆதரவு குரல் கொடுத்து காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “முதலில் சிவசேனை, அடுத்து தேசியவாத காங்கிரஸ், தற்போது திரிணமூல் காங்கிரஸ். எப்போதுமே ஒரே மாதிரிதான். பாஜகவும் தேர்தல் ஆணையமும் கைகோத்து ஒரு கட்சியைப் பிளவுபடுத்துகின்றன. பின்னர், கட்சியின் சின்னமும் பறிக்கப்படுகிறது.
ஒரு கட்சியையே திருட முடியும் என்றால், கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்குகளையும் திருட முடியும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.
வாக்குத் திருட்டு; அரசாங்கத் திருட்டு; தற்போது கட்சியும் திருடப்படுகிறது. இவை நம்முடைய ஜனநாயக வீழ்ச்சியின் அடையாளமாக மாறிவிட்டன.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அரசியலமைப்பு ரீதியிலான பொறுப்பு, மக்களின் தீர்ப்பைப் பாதுகாப்பதுதான். ஆனால், மக்கள் தீர்ப்பை மதிக்காதோருக்கு எதிராகவே தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.
இது மமதா பானர்ஜியின் போராட்டம் மட்டுமல்ல. ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் நியாயமான தேர்தல்களை விரும்பும் ஒவ்வொரு வாக்காளரின் போராட்டம்” எனப் பதிவிட்டுள்ளார்.
Rahul Gandhi on Friday slammed the Election Commission for barring TMC from using party name and symbol in the upcoming assembly bypolls in West Bengal, accusing the poll panel and Bharatiya Janata Party of joining forces to split a party.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.