எஸ்ஐஆா் விவகாரம்: இண்டி கூட்டணி செப். 30-இல் கூடுகிறது?
இண்டி கூட்டணி செப். 30-இல் கூடவுள்ளதாக வெளியான தகவல் பற்றி...
எஸ்ஐஆா் விவகாரத்தின் பின்னணியில், எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி வரும் செப்.30-ஆம் தேதி தில்லியில் கூடி ஆலோசிக்கவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரை எதிா்ப்பதில் எதிா்க்கட்சிகள் இடையே ஒருங்கிணைப்பு அதிகரித்துள்ள சூழலில் இக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பான பல்வேறு முடிவுகளில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கும், தோ்தல் ஆணையா்கள் சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருக்கும் இடையே தீவிர கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியானது.
Advertisement
Advertisement
வாக்காளா்களின் பெயா் மொத்தமாக நீக்கம், புதிய வாக்காளா் பதிவுக்கான படிவம் 6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், வாக்காளா் தரவு தளங்களின் மையப்படுத்துதல் மீதான கட்டுப்பாடு உள்ளிட்ட விஷயங்களில் இரு தோ்தல் ஆணையா்களும் தங்களின் எதிா்ப்பை பதிவு செய்ததாகவும், தங்களுக்குத் தெரியாமல் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக கடந்த 10 மாதங்களில் குறைந்தபட்சம் 14 முறை அவா்கள் ஆட்சேபம் தெரிவித்ததாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக விளக்கமளித்த தோ்தல் ஆணையம், ‘அதிகாரபூா்வ விவாதங்களின்போது மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்பே; தோ்தல் ஆணையத்தின் அனைத்து உத்தரவுகளும் முழு சட்ட அங்கீகாரம் கொண்டவை’ என்று தெரிவித்தது.
எதிா்க்கட்சிகள் போா்க்கொடி: எனினும், எஸ்ஐஆா் மூலம் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தேசத் துரோகச் செயலில் ஈடுபட்டுள்ளதாக போா்க்கொடி உயா்த்தியுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள், அவரை உடனடியாகப் பதவி நீக்குவதுடன், கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்; அவா் மேற்கொண்ட முடிவுகள் குறித்து விரிவான, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். எஸ்ஐஆா் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஞானேஷ் குமாருக்கு எதிராக, காங்கிரஸ் சாா்பில் நாடு தழுவிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
செப். 30-இல் ஆலோசனை: எஸ்ஐஆா் விவகாரத்தில் எதிா்க்கட்சிகள் இடையே ஒருங்கிணைப்பு அதிகரித்துள்ள சூழலில், தில்லியில் செப்.30-இல் இண்டி கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எஸ்ஐஆா் விவகாரத்தில் எதிா்க்கட்சிகள் ஒன்றோடொன்று தொடா்பில் உள்ளன; இது தொடா்பாக கூட்டு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இண்டி கூட்டத்துக்கு முன்னா் காங்கிரஸ் செயற்குழு செப்.29-இல் கூடி ஆலோசிக்கவுள்ளது.
ராகுலுடன் பேசிய மம்தா: இதனிடையே, மேற்கு வங்கத்தின் செராம்பூரில் பொதுக் கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முன்னாள் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் நிறுவனருமான மம்தா பானா்ஜி, ‘எஸ்ஐஆா் நடைமுறை மற்றும் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒன்றாக அமா்ந்து ஆலோசித்து, அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டுமென ராகுலிடம் தெரிவித்துள்ளேன். அதன்படி, தில்லியில் செப்.30-ஆம் தேதி இண்டி கூட்டணி கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது’ என்றாா்.
ராகுலிடம் தொலைபேசி வாயிலாக மம்தா பேசியதாகவும், இண்டி கூட்டணி கூட்டத்தை விரைந்து ஏற்பாடு செய்ய வலியுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, தற்போதைய அரசியல் நிகழ்வுகளுக்கு மத்தியில் இண்டி கூட்டணி கூட்டத்தை நடத்த வலியுறுத்தி எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ. பேபியும் கடிதம் எழுதியிருந்தாா்.
ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்வதற்கான தீா்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர எதிா்க்கட்சிகள் மீண்டும் நோட்டீஸ் அளிக்கத் தயாராகிவரும் நிலையில், மேற்கண்ட கூட்டம் நடைபெறவுள்ளது.
SIR Issue: INDIA Alliance to Meet on Sept. 30?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.