முகப்பு
தற்போதைய செய்திகள்

விஜய்க்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த பூவே உனக்காக!

விஜய்யின் திரையுலகப் பயணத்தில் திருப்பு முனையாக அமைந்த பூவே உனக்காக திரைப்படம் குறித்து...

Updated On : 22 ஜூன், 2025 at 10:24 AM
விஜய் - சங்கீதா
பகிர்:
Updated On : 21 ஜூன், 2025 at 9:44 PM

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் 1984 ஆம் ஆண்டு வெளியான வெற்றி என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இப்படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய விஜய், 1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் நாயகனாக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார்.

தொடர்ந்து, இவர் நடித்த செந்தூரப்பாண்டி திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து விஜய் நடித்த ரசிகன் திரைப்படம் மிகப் பெரிய ஹிட் அடித்து, இவருக்கு இளைய தளபதி என்ற பெயரைப் பெற்றுத் தந்தது.

ஆனால், விஜய்யின் திரையுலக வாழ்வில் அவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் 1996 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான பூவே உனக்காக. இளம் தலைமுறை ரசிகர்கள் மட்டுமே இருந்த விஜய்க்கு, இப்படம் அதிகளவில் குடும்ப ரசிகர்களைக் கொண்டுவந்து சேர்த்தது என்றே கூறலாம்.

Advertisement

இப்படத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நடிகராகவும் உச்ச நட்சத்திரங்கள் பட்டியலிலும் இணைந்தார் விஜய். பூவே உனக்காக படத்தின் வெற்றிக்கு விஜய்யின் நேர்த்தியான நடிப்பு பக்க பலமாக அமைந்தது என்றே கூறலாம். இப்படம் வெளியாகி 29 ஆண்டுகள் ஆனாலும், இப்போதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும்போது நல்ல வரவேற்பையே பெறுகிறது.

Updated On : 22 ஜூன், 2025 at 10:02 AM

காதல் திருமணத்தால் பிரிந்த இரு குடும்பங்களை 25 ஆண்டுகள் கழித்து அதே காதலைக் கொண்டு மீண்டும் இரு குடும்பங்களை நாயகன் சேர்த்து வைக்கிறார். இதுவே பூவே உனக்காக படத்தின் மையக்கரு. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் விஜய்யுடன் நாகேஷ், எம்.என்.நம்பியார், ஜெய்கணேஷ், மலேசியா வாசுதேவன், சுகுமாரி, விஜயகுமாரி, சங்கீதா, அஞ்சு அரவிந்த், சார்லி என நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தார்கள்.

விஜய் - சங்கீதா

மூத்த நடிகர்கள் பலர் நடித்திருந்தாலும் விஜய்யின் அழுத்தமான நடிப்பு படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. முதலில் இயக்குநர் விக்ரமனிடம் பிரபலம் ஒருவர், ”கார்த்தி போன்ற நட்சத்திர நடிகர்கள் இருக்கும்போது விஜய்யை ஏன் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்களே, குருவி தலையில் பனங்காய் வைப்பதுபோல் உள்ளது” என்று கூறினாராம்.

விஜய்யின் திறமையைக் கண்டறிந்த விக்ரமன், படப்பிடிப்புக்கு பின்னர் அந்த பிரபலத்திடம், “சார், இந்த குருவி தலையில் பாறாங்கல்லையே வைக்கலாம்” என்று கூறினேன் என்று விக்ரமனே நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பார்.

1996 பிப். 15 வெளியான இப்படம் தொடர்ந்து 270 நாள்கள் ஓடி சாதனை படைத்தது. இதனிடையே தீபாவளிக்கு புது படங்கள் வெளியானதால், இப்படம் நீக்கப்பட்டது. இல்லையென்றால் ஒரு வருடம் ஓடியிருக்கும்.

Updated On : 22 ஜூன், 2025 at 10:04 AM

இப்படத்தில் தான்(விஜய்) காதலிக்கும் பெண், தன்னை காதலிக்கவில்லை என்று தெரிந்தும், அவருடைய(அஞ்சு அரவிந்த்) காதலை சேர்த்து வைப்பதற்காக, அவர்களின் வீட்டுக்கு பேரனாக செல்வார், உண்மையான பேத்தி சங்கீதாவும் வர அதன் பின்னர் நடக்கும் நிகழ்வுகளை நகைச்சுவை கலந்து படத்திற்கு உயிர் கொடுத்திருப்பார் விக்ரமன்.

இப்படத்தில் இடம்பெற்ற ‘ஒரு செடியில ஒரு பூதான் பூக்கும், உதிர்ந்துருச்சின்னா உதிர்ந்ததுதான்’, ’மதம் என்பது மனுஷங்ககிட்ட மட்டும்தான் இருக்கு... ஆனா காதல் என்பது காக்கா குருவிகிட்ட கூட இருக்கு’ போன்ற வசனங்கள் தற்போதைய 2கே கிட்ஸ் மத்தியிலும் பிரபலமாக உள்ளன.

பூவே உனக்காக கிளைமேக்ஸில் சங்கீதாவை, விஜய் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அஞ்சு அரவிந்த் கோரிக்கை வைக்கும்போது, தன் காதலையே கடைசி வரைக்கும் நினைச்சிட்டு இருக்கும் என்று கூறி பையை மாட்டிக்கொண்டு விஜய் செல்லும்போது திரையரங்கில் ரசிகர்களின் கைத்தட்டல்கள் குவிந்து, அனைவரின் கண்களிலும் கண்ணீர் வரவழைத்ததே படத்தின் வெற்றி.

இந்த கிளைமேக்ஸ் மட்டுமில்லாமல் விஜய் - சங்கீதா இணைவதுபோலவும் கிளைமேக்ஸ் காட்சியும் இயக்குநர் விக்ரமன் எடுத்ததாகவும் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் கூறியிருந்தார்.

Updated On : 22 ஜூன், 2025 at 10:05 AM

அதேபோல் பூவே உனக்காக படத்தில் எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ஹிட் அடித்தன. ’ஆனந்தம் ஆனந்தம் பாடும்’ பாடல் பட்டிதொட்டி ஒலித்தது. ‘சொல்லாமலே யார் பார்த்தது’, ‘ஒய்யாரி பானிபூரி’ பாடல்கள் இன்றளவும் பிரபலமாக உள்ளது. நடிகர் முரளி கெளரவ வேடத்தில் ‘மச்சினிச்சி வர்ர நேரம் மண் மணக்குது’என்ற பாடலுக்கு ஆடியிருப்பார்.

இந்து- கிறிஸ்துவ மதப் பின்னணியில் வாழும் இரு குடும்பங்கள் மீண்டும் இணையும் காட்சி, தான் விரும்பியரை, அவர் விரும்பிய ஒருவருடன் சேர்த்து வைக்கும் காட்சி என படத்தைக் கொண்டாட முக்கிய காரணங்களாக உள்ளன.

இவ்வாறாக படத்தின் வசனங்கள், விஜய்யின் அட்டகாசமான நடிப்பு என பூவே உனக்காக படம் விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்து எவர் கிரீன் திரைப்படமாகவும் ஒருதலைக் காதலர்கள் கொண்டாடும் திரைப்படமாகவும் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.