FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புத்தக வெளி

கொங்கு வட்டார மண் மணம் கமழும் சி.ஆர். ரவீந்திரனின் "ஈரம் கசிந்த நிலம்" நாவல் விமர்சனம்!

கதையில் நிழலாய் இருக்கும் முக்கிய கதாபாத்திரம் நிலம். நிலத்தின் மீது பெரும் பற்று கொண்ட, வேளாண்மையை மட்டும் முக்கிய ஜீவிதமாய் கொண்டு வாழ்ந்த வேளாளக் கவுண்டர் இன மக்களை கதை மாந்தர்களாய் கொண்டு, 

Updated On : 8 மே 2018, 2:36 pm IST
பகிர்:

வாசித்ததில் மிகப் பிடித்தமான நாவல் இது.

கொங்கு நாட்டு கிராமம் அவர்கள் மொழியில் சொல்லப் போனால் "சாளைகள்" அந்த சாளைகளில் குடியிருந்து கொண்டு வேளாளத்தொழில் செய்து வரும் குறிப்பிட்ட இனத்து மக்களின் வாழ்வியல் கதை தான் ஈரம் கசிந்த நிலம் நாவல்.

கதை நெடுக நிறைய கதாபாத்திரங்கள் அவரவற்குரிய தனித்தனி இயல்புகளோடு சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமின்றி விவரிக்கப்படுகின்றனர்.

Advertisement

Advertisement

  • அம்மணி
  • செங்கணன்
  • கண்ணுச்சாமி
  • வெடிக்கார வேலக்கவுண்டர் (அவரது மகன்கள் துரை மற்றும் மாணிக்கம்)
  • சாக்குப்பை நாயக்கர் (கிராமத்தின் எல்லையிலிருந்து சாளைகள் பிரியுமிடத்தில் டீக்கடை வைத்திருப்பவர்)
  • காளியப்பன்

இன்னும் பலர்...

அம்மணி சொந்த பூமிக்காரி, அவள் தனது அண்ணன் செங்கணன் பாதுகாப்பில் வாழ்கிறாள், கல்யாணத்திற்குத் தயாராய் நிற்கும் அம்மணிக்கு எந்த மாப்பிள்ளையை பார்த்தாலும் சரி சொல்ல மனமில்லை. காரணம் அவளுக்கு கல்யாணம் செய்து கொண்டு தன் சொந்த நிலத்தை விட்டுப் பிரிய மனமில்லை, கல்யாணத்திற்கு பிறகும் தன் வாழ்வு அந்த நிலத்தோடு அந்த மண்ணோடு ஒட்டியே இருக்க வேண்டும் என அவள் விரும்புகிறாள், ஊர் திருவிழாவின் போது தான் அம்மணி கண்ணுச்சாமியைப் பார்க்க நேர்கிறது.

கண்ணுசாமியின் மீது அவளுக்கு காதல் வரக் காரணங்கள் ஏதும் தெளிவாக இந்தக் கதையில் சொல்லப் படவில்லை. அவள் அவனை விரும்புகிறாள் அவ்வளவு தான், அவனுக்கும் அம்மணி என்றால் இஷ்டம். கண்ணுசாமி தன் தாத்தா வீட்டில், தனது கணக்காளன் பணி நிமித்தம் வந்து தங்கினாலும் கூட அவனது தாய், சாளையில் பனையேறியாய் இருந்த மூக்கனுடன் ஓடிப் போனவளாதலால் அவனை தன் பேரன் என்று சொல்லிக் கொள்ளாமல் ஒன்று விட்ட தம்பி மகனாகவே ஊரார் முன் அடையாளபடுத்துகிறார் அவனது தாத்தா.

இதற்கிடையில் வெடிக்கார வேலக் கவுண்டர் மற்றும் அவரது மகன்கள் என்றால் ஊரில் ஒரு மரியாதை கலந்த பயம் நிலவுகிறது, அப்படி இருக்க... வெடிக்காரர் நிலத்தை குத்தகை பார்க்கும் காளியப்பன் குடும்பம் நிலப் பிரச்சினையில் வெடிக்காரரையும் அவரது மகன்களையும் சந்திக்கு இழுத்து விஷயம் காவல்துறை வரை போய்விட, நிலத்துக்குச் சொந்தக்காரர் எனும் வேடிக்காரரின் வீம்பு தொய்வடையத் தொடங்குகிறது. காளியப்பன் குடும்பத்தார் மிகச் சிறந்த உழைப்பாளிகள்... வெடிக்காரர் வெறும் தரிசாக குத்தகைக்கு விட்ட அவரது நிலத்தை பண்படுத்தி, கிணறெல்லாம் ஆழப்படுத்தி பாசனத்திற்கும் வற்றாத வழி செய்து மண்ணைப் பொன்னாக்கியது காளியப்பன் குடும்பம் தான், தரிசாய் கொடுத்தது தங்கமாய் ஜொலித்து வருமானம் கை மேல் கிடைக்கும் நேரத்தில் குத்தகை ரத்து செய்து விட்டு நிலத்தை ஒப்படைத்து விட்டுப் போ என்றால் காளியப்பன் சும்மா இருப்பானா!? அவனளவில் அந்த சுற்று வட்டாரத்தில் குத்தகைதாரகளாய் ஒன்று திரட்டி கையெழுத்து வாங்கி அவர்களுக்கென போராட ஒரு சங்கம் அமையுமளவில் விஷயம் போய்விடுகிறது .

இவர்கள் பிரச்சினை நீதிமன்றம் வரை போக வெடிக்காரர் தோற்றுப் போகிறார். வழக்கை நடத்தியே அவரது பணம் கரைய... விருந்து, கேளிக்கைகள் என காவல்துறை ஆட்களையும் கையில் போட்டுக் கொண்ட காளியப்பன் குத்தகை முடியும் மட்டும் அதிலிருந்து வருமானம் முழுக்க பெறுமட்டும் வெடிக்காரரின் சாளையிலேயே இருக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இதனால் வெறுத்து கோபம் தலைக்கு ஏறிய வெடிக்காரரின் மகன் மாணிக்கம், காளியப்பனை சுட்டு விட அவன் இறந்து விடுகிறான், அவன் மனைவியும் குழந்தைகளும் அனாதைகளாய் அந்த சாளையை விட்டு வெளியேற வேண்டிய நிலை வரை விஷயம் கைமீறி போகிறது.

இதற்கிடையில் அம்மணி கண்ணுச்சாமி கதை, நிலத்தின் மீதும், வேளாண்மையின் மீதும் மிக்க விருப்பம் கொண்டவளாய் இருந்த அம்மணி பிற்பாடு கண்ணுச்சாமியுடன் மிகுந்த காதலில் இருந்தாள். வீட்டார்க்கு விஷயம் தெரியாது. இப்படி உருண்ட நாட்களில் கண்ணுச்சாமியின் தாத்தா அவனுக்கு தன் அந்தஸ்துக்கு ஏற்ற பணக்காரப்பெண் ஒருத்தியை கல்யாணம் பேசி முடிக்க முடிவு செய்கிறார், இது தெரிந்தவனாய் இருந்தும் கண்ணுச்சாமியால் அவனது தாத்தாவிடம் மறுப்பு சொல்ல முடியவில்லை, காரணம் தான் ஒரு பனையேறியின் மகன் எனும் உறுத்தல் அவனுக்கு இருந்ததால் அவன் மிகுந்த தயக்கத்தோடு கதை நெடுக கூச்ச சுபாவியாய் சித்தரிக்கப்படுகிறான்.

செங்கணன் தன் மனைவி மக்களோடு, மனைவி வீட்டு விசேசத்திற்கு என புறப்பட்டுச் சென்ற ஓர் நாளிரவில் கண்ணுச்சாமி அம்மணியின் வீட்டுக்கு வருகிறான், அகஸ்மாத்தாக அந்த இரவு அம்மணி கண்ணுச்சாமியுடன் இருப்பதை ஏதோ ஒரு வேலையாக இரவோடு இரவாக வீடு திரும்பும் செங்கணன் பார்த்து விட நேர்கிறது, ஆத்திரத்தில் விளைந்த கோபத்தில் அவன் அம்மணியை கண் முகம் தெரியாமல் அடித்து விட மிகுந்த வைராக்கியக்காரியான அம்மணி நொடியும் யோசிக்காமல் இருட்டில் தன்னுடன் இருந்தவன் யாரென்றும் கூற விருப்பம் இல்லாதவளாய் ஓடிப் போய் ஊர் ஒதுக்குப் புறத்தில் இருக்கும் காளி கோயில் கிணற்றில் விழுந்து இறந்து போகிறாள்.

இதற்கு மேல் கதை என்ன?

அம்மணி கிணற்றில் விழுந்து தான் இறந்தாள் எனும் சுவடே இன்றி, இரவோடு இரவாக ஊர்ப் பெரிய கவுண்டர் சில மாதாரிகளை வைத்து அரவம் இன்றி சுடுகாட்டில் அம்மணியை எரித்து சாம்பல் ஆத்தி வீடு திரும்புகின்றனர். அவர்களைப் பொறுத்த வரை அம்மணி அந்நிய ஆடவனோடு அந்த இரவில் இருந்த செய்தி மிக்க அவமானமான ஒன்று, அவன் யாரென்பது முக்கியமல்ல, வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் அம்மணி அப்படி தன் மானத்தை இழந்தது அந்த ஊர் மற்றும் அதன் மக்களைப் பொறுத்தவரை அசிங்கமான ஒரு விசயமாகவே பார்க்கப்படக் கூடும் எனும் பயமே அம்மணியின் கதையை இப்படி முடித்து வைத்தது.

நாவல் பேசும் செய்திகள்:

கதையில் நிழலாய் இருக்கும் முக்கிய கதாபாத்திரம் நிலம். நிலத்தின் மீது பெரும் பற்று கொண்ட வேளாண்மையை மட்டும் முக்கிய ஜீவிதமாய் கொண்டு வாழ்ந்த வேளாளக் கவுண்டர் இன மக்களை கதை மாந்தர்களாய் கொண்டு, இந்த நாவல் நகர்வதால்... நிலம் தான் இந்த நாவலின் ஹீரோ. அம்மணி தன் கல்யாணத்தை தள்ளிப் போடக் காரணம் அவள் தனது சொந்த நிலத்தின் மீது வைத்த ஆசையே!

வெடிக்காரர் மற்றும் அவரது மகன்களின் மிரட்டுதலான அறிமுகத்துக்கு காரணம் அவர்களிடம் அளவுக்கதிகமாய் சேர்ந்து போயிருந்த நிலமே, சும்மா பாழாகிறதே என்று தான் காளியப்பனுக்கு குத்தகைக்கு விடுகின்றனர். ஆனாலும் நிலத்துக்கு சொந்தக்காரர்கள் தாமே என்ற அகந்தையை ஒழிக்க இயலாததால் காளியப்பனுக்கும் வெடிக்காரருக்கும் பெரும்பிரச்சினை வெடித்து பகை முற்றுகிறது. காளியப்பன் மாணிக்கத்தால் சுட்டுக் கொல்லப்படுவதோடு ஓய்கிறது இந்த சண்டை.

இப்படி நிலமே இங்கே சகல விளைவுகள் மற்றும் அவற்றின் எதிர் விளைவுகளுக்கும் காரணம் ஆகிறது.

மண் மணக்க மணக்க, கொங்கு வட்டார மக்களின் நிதர்சன வாழ்வை அப்படியே அவர்கள் வட்டார மொழி வழக்கில் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்து போல சுவை பட எழுதி மனதை ஈர்க்கிறார் ஆசிரியர் சி.ஆர்.ரவீந்திரன்.

இந்த நாவல் வெளிவந்து இன்று வரைக்கும் ‘பாரதிய பரீக்ஷித்’ உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளது மேலும் இளங்கலை அறிவியல் பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் துணைப்பாடநூல் பாடத் திட்டத்திலும் இணைக்கப்பட்டுள்ளது.

கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய நூல்களில் ஒன்றேனே சொல்லலாம்.

வட்டார வழக்கில் குறிப்பிட்ட இன மக்களின் நிலம் சார்ந்த வாழ்வியலை அழகாக கண் முன்னே காட்சிப்படுத்தியமையே இந்த நாவலின் வெற்றி.

ஆசிரியர் - சி.ஆர்.ரவீந்திரன்
புத்தகம் - ஈரம் கசிந்த நிலம்
வெளியீடு - நினைவில் இல்லை.
விலை - ரூ 30
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments