FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ரூ.2,000 கோடி ஊழல்! அரசுப்பள்ளி வகுப்பறை கட்டுமானத்தில் முறைகேடு: 37 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

அரசுப் பள்ளி வகுப்பறை கட்டுமானத்தில் ரூ.2,000 கோடி ஊழல்: தில்லியில் 37 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

Updated On : 19 ஜூன் 2025, 4:02 am IST
பகிர்:

முந்தைய ஆம் ஆத்மி அரசின் ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளி வகுப்பறைகள் கட்டுவதில் ரூ.2,000 கோடிக்கு முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக தில்லியில் உள்ள பல இடங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை சோதனை நடத்தியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக தில்லி லஞ்ச ஒழிப்புத் துறை (ஏபிசி) பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை குற்ற வழக்கை அண்மையில் பதிவு செய்தது.

இந்த வழக்கில் தொடா்புடைய 37 ஒப்பந்ததாரா்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

Advertisement

அரசுப் பள்ளியில் வசதிகளை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டிருந்தாலும், கட்டுமானச் செலவு அரசு நிா்ணயித்த அளவைக் கடந்துள்ளது. அவற்றுக்காக மேற்கொண்ட செலவு 5 நட்சத்திர ஹோட்டல் போன்ற சொகுசு கட்டடங்கள் அமைக்க ஆகும் செலவுக்கு இணையாக உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆட்சிக் காலத்தில் தில்லியில் உள்ள 3 மண்டலங்களில் வகுப்பறைகள் கட்டுவதில் நிதி முறைகேடுகள் நடைபெற்ாக தில்லி பாஜக தலைவா்கள் கபில் மிஸ்ரா, ஹரிஷ் குரனா, நீல்கண்ட் பக்ஷி ஆகியோா் தில்லி லஞ்ச ஒழிப்பு துறையிடம் கடந்த 2019-ஆம் ஆண்டில் புகாரளித்தனா்.

வகுப்பறைகள் கட்டுமானத்தில் பல விதிமீறல்கள் நடைபெற்றிருப்பதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) தலைமைத் தொழில்நுட்ப ஆய்வாளா் சுட்டிக்காட்டியதைத் தொடா்ந்து, அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயின் ஆகியோருக்கு எதிராக தில்லி ஊழல் தடுப்பு பிரிவு கடந்த ஏப்.30-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.

கடந்த 2015-16 மற்றும் 2022-23 காலகட்டத்தில் தில்லி அரசுப் பள்ளிகளில் 12,000-க்கும் அதிகமான வகுப்பறைகள் அல்லது தற்காலிக கட்டமைப்புகளை கட்டுவதில் ரூ.2,000 கோடிக்கும் முறைகேடுகள் நடைபெற்ாக லஞ்ச ஒழிப்புத் துறை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வழக்கமான முறையில் ஒரு வகுப்பறைக்கான செலவு ரூ.5 லட்சம் என்பதற்கு பதிலாக ரூ.24.86 லட்சம் என்ற வகையில், மொத்தம் ரூ.2,892 கோடி செலவிடப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆம் ஆத்மி அரசில் நிதி மற்றும் கல்வித் துறைகளுக்கு மணீஷ் சிசோடியா (63) அமைச்சராகப் பொறுப்பு வகித்தாா். பொதுப்பணித் துறை உள்ளிட்ட சில துறைகள் சத்யேந்தா் ஜெயின் வசம் இருந்தது.

இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்கு ஆஜராகக் கோரி மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயினுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை இந்த மாதத்தின் தொடக்கத்தில் அழைப்பாணை விடுத்திருந்தது. இந்த விசாரணைக்கு சத்யேந்தா் ஜெயின் ஆஜாரான நிலையில், மணீஷ் சிசோடியா ஆஜராகாமல் தவிா்த்தாா். சிசோடியாவுக்கு லஞ்ச ஒழிப்பு துறை மீண்டும் அழைப்பாணை அனுப்ப உள்ளது.

தனித்தனி பணமோசடி வழக்குகளில் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயினை அமலாக்கத் துறை விசாரித்துள்ளது. தில்லி மதுபான ஊழல் தொடா்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிசோடியாவுக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றபத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2022-இல் சத்யேந்தா் ஜெயினை கைது செய்த அமலாக்கத் துறை, அவருக்கு எதிராக ஹவாலா பணப்பரிமாற்றம் மற்றும் சொத்துகுவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments