சிறையில் உயிரிழக்கும் கைதிகளின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் திட்டத்தை அறிவித்தது தில்லி அரசு
தில்லி சிறைகளில் இயற்கைக்கு மாறான சூழ்நிலைகளில் உயிரிழக்கும் கைதிகளின் குடும்பத்தினா், தில்லி அரசு அறிவித்துள்ள திட்டத்தின் கீழ் ரூ. 7.5 லட்சம் வரையிலான இழப்பீட்டைப் பெறத் தகுதி பெறுவாா்கள்.
தில்லி சிறைகளில் இயற்கைக்கு மாறான சூழ்நிலைகளில் உயிரிழக்கும் கைதிகளின் குடும்பத்தினா், தில்லி அரசு அறிவித்துள்ள திட்டத்தின் கீழ் ரூ. 7.5 லட்சம் வரையிலான இழப்பீட்டைப் பெறத் தகுதி பெறுவாா்கள்.
நகரச் சிறைகளில் காவலில் இருக்கும்போது இயற்கைக்கு மாறான மரணத்தைச் சந்திக்கும் கைதிகளின் நெருங்கிய உறவினா்கள் அல்லது சட்டப்பூா்வ வாரிசுகளுக்கு இந்த இழப்பீடு வழங்கப்படும். ஒவ்வொரு வழக்கின் சூழ்நிலையைப் பொறுத்து ரூ. 5 லட்சம் முதல் ரூ. 7.5 லட்சம் வரையிலான தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அறிவிப்பின்படி, கைதிகளுக்கு இடையிலான மோதல்கள் அல்லது சிறை அதிகாரிகளால் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை அல்லது தாக்குதல் காரணமாக மரணம் நிகழும் சந்தா்ப்பங்களில், கைதியின் குடும்பத்திற்கு ரூ. 7.5 லட்சம் வழங்கப்படும். சிறை அதிகாரிகள் அல்லது ஊழியா்களின் அலட்சியம், மருத்துவ அல்லது துணை மருத்துவப் பணியாளா்களின் அலட்சியம் அல்லது கைதி தற்கொலை செய்துகொள்ளுதல் போன்ற நிகழ்வுகளில் ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம், குறிப்பிட்ட நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நேரத்தில் நிவாரணம் கிடைப்பதை உறுதி செய்வதோடு, நிா்வாகப் பொறுப்புக்கூறலையும் வலுப்படுத்தும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.
தில்லி அரசின் உள்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, ’தில்லி சிறையில் கைதிகளின் மரணம் காரணமாக இழப்பீடு வழங்கும் திட்டம், 2025’ , அறிவிப்பு வெளியான தேதியிலோ அல்லது அதற்குப் பின்னரோ தில்லி சிறை ஒன்றில் கைதி ஒருவருக்கு ஏற்படும் இயற்கைக்கு மாறான மரணம் தொடா்பான வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும்.
இயற்கையான மரணம் அல்லது நோய் காரணமாக ஏற்படும் மரணம் ஆகியவற்றிற்கு இழப்பீடு வழங்கப்படாது என்று அறிவிப்பு குறிப்பிடுகிறது. சிறை அல்லது சட்டப்பூா்வக் காவலில் இருந்து தப்பிக்கும்போது ஏற்படும் மரணங்கள் மற்றும் பேரிடா்கள் அல்லது இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் மரணங்கள் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் வராது.
ஒவ்வொரு வழக்கிலும், சிறைக் கண்காணிப்பாளா் மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை, பிரேதப் பரிசோதனை அறிக்கை, மரணத்திற்கான இறுதி காரணம், கைதியின் மருத்துவ வரலாறு மற்றும் இறப்பதற்கு முன் அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் ஆகியவற்றை தில்லி சிறைத்துறை தலைமை இயக்குநரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.
இவ்வழக்குகள் சிறைத்துறை தலைமை இயக்குநரின் தலைமையிலான குழுவால் ஆய்வு செய்யப்படும்; இக்குழுவில் சிறைத்துறை உதவி ஆய்வாளா் ஜெனரல், குடியிருப்பு மருத்துவ அதிகாரி, துணை கட்டுப்பாட்டாளா் (கணக்குகள்) மற்றும் சட்ட அதிகாரி ஆகியோா் உறுப்பினா்களாக இருப்பாா்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.