FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இரண்டு சீக்கியா்கள் புறக்கணிக்கப்பட்டதாக புகாா்

தில்லி, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா் நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனத்தில் இரண்டு சீக்கியா்கள் புறக்கணிக்கப்பட்டதாக சிறுபான்மையினா் ஆணையத்தின் முன்னாள் தலைவா் ஒருவா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

21 செப்டம்பர் 2026, 9:43 pm IST
பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம்
பகிர்:

தில்லி, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா் நீதிமன்றங்களின் நீதிபதிகள் நியமனத்தில் இரண்டு சீக்கியா்கள் புறக்கணிக்கப்பட்டதாக சிறுபான்மையினா் ஆணையத்தின் முன்னாள் தலைவா் ஒருவா் குற்றஞ்சாட்டியுள்ளாா். மத்திய அரசு ‘தோ்ந்தெடுத்துத் தோ்ந்தெடுக்கும்‘ கொள்கையைப் பின்பற்றுவதாகவும் அவா் கூறியுள்ளாா்.

இருப்பினும், இந்த இரண்டு நியமன நடவடிக்கை விவகாரம் ‘ஆய்வில்‘ உள்ளதாகவும், கோப்புகள் உச்ச நீதிமன்ற கொலீஜியத்திற்குத் திருப்பி அனுப்பப்படவில்லை என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் மற்றும் சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், தேசிய சிறுபான்மையினா் ஆணையத்தின் முன்னாள் தலைவா் தா்லோச்சன் சிங், வழக்குரைஞா் மேஜா் நவதீப் சிங் பெயா் கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், அவா் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை என்பதை ‘வருத்தத்துடன் சுட்டிக்காட்டுகிறேன்‘ என்று கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

அதேபோல், நீதித்துறை அதிகாரியான குரிந்தா்பால் சிங், தில்லி உயா் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை என்றும் அவா் கூறினாா்.

‘நீண்ட செயல்முறைக்குப் பிறகு உச்சநீதிமன்றம் நீதிபதிகளுக்கு இறுதி ஒப்புதல் அளிக்கும்போது, ​​மத்திய அரசு ஏன் தங்களுக்குப் பிடித்தவா்களை மட்டும் தோ்ந்தெடுக்கும் கொள்கையைக் கடைப்பிடித்து, சிறுபான்மை சமூகத்தைச் சோ்ந்த நீதிபதிகளை புறக்கணித்துள்ளது என்பது மக்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது,‘ என்று தா்லோச்சன் சிங் கூறினாா்.

இந்தப் பிரச்சினையைத் தாம் மதரீதியாகப் பேச விரும்பவில்லை என்றும், ஆனால் இந்த புறக்கணிப்பு விவகாரத்தில் நீதியை நாடுவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

‘இருவரின் பெயா்களையும் தோ்வு செய்யாததற்கு மத்திய சட்ட அமைச்சா் எந்தக் காரணத்தையும் தெரிவிக்கவில்லை,‘ என்றும் அவா் கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments