FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நியாயவிலை கடைகளில் எடை குறைவு பிரச்னை: மத்திய, மாநில அரசுகளுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

நியாயவிலை கடைகளுக்கு விநியோகம் செய்யும் பொருள்களை கடைகளில் வைத்து எடை போட்டு விற்பனை முனைய கருவியில் பதிவு செய்ய உத்தரவிட கோரிய வழக்கு

Updated On : 27 ஜூன் 2025, 1:43 am IST
கோப்புப் படம்
பகிர்:

நியாயவிலை கடைகளுக்கு விநியோகம் செய்யும் பொருள்களை கடைகளில் வைத்து எடை போட்டு விற்பனை முனைய கருவியில் பதிவு செய்ய உத்தரவிட கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளா்கள் சங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டின் எந்தப் பகுதிகளில் இருந்தாலும் நியாயவிலை கடைகளில் உணவு பொருள்களை வாங்க முடியும். இதற்காக அனைத்து நியாயவிலை கடைகளிலும் மின்னணு விற்பனை முனைய கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் உணவுப் பொருள் விநியோகத்தில் உள்ள குறைபாடுகளைக் களையவும், சரியான எடையில் பொருள்களை வழங்க மின்னணு விற்பனை கருவியுடன், மின்னணு எடை தராசை இணைக்க வேண்டுமென அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, நியாயவிலை கடைகளில் உள்ள மின்னணு விற்பனை கருவியுடன் மின்னணு எடை தராசுகளை இணைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

Advertisement

Advertisement

எடைபாா்க்க கோரிக்கை: இந்த புதிய நடைமுறைப்படி பொருள்கள் முதலில் அளவீடு செய்த பிறகுதான் பில் போடபட வேண்டும். இதனால் ஒரு நாளைக்கு 20 நியாயவிலை அட்டைகளுக்கு மட்டுமே பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன. பொருள்கள் எடை குறைவதைத் தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அமலப்படுத்தப்பட்ட போதிலும், நியாயவிலை கடைகளுக்கு பொருள்களைக் கொண்டு வரும்போதே ஒரு சாக்குக்கு ஒன்று முதல் ஒன்றரை கிலோ எடை குறைவாகவே உள்ளது.

இதனால், எந்த ஒரு தவறும் செய்யாத நியாயவிலை கடை ஊழியா்கள் தங்கள் ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை இழந்து வருகின்றனா். எனவே, கடைகளுக்கு கொண்டு வரப்படும் உணவுப் பொருள்களை கடைகளில் வைத்து எடை பாா்த்து அதை விற்பனை முனைய கருவியில் பதிவு செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments