கபினியிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் அடிப்பாலாறு வந்தடைந்தது!
காவிரியும் பாலாறும் கூடும் இடமான அடிப்பாலாற்றில் மலைகளுக்கு இடையே காவேரி நீர் பாய்ந்தோடி வருவது குறித்து...
கபினியிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் இன்று (ஆகஸ்ட் 4) அடிப்பாலாறு வந்தடைந்தது.
கர்நாடக மாநிலம் கபினியிலிருந்து திறக்கப்பட்ட உபரிநீர் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது. கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக கர்நாடகத்தில் உள்ள கபினிக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கபினி நிரம்பிய நிலையில் இருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் கபினியின் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. உபரிநீர் வரத்து காரணமாக காவிரியில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டது. மூன்று நாள்களுக்குப் பிறகு இன்று பிற்பகலில் கபினியின் உபரிநீர் காவிரியும் பாலாறும் கூடும் இடமான அடிப்பாலாறுக்கு நுங்கும் நுரையுமாக வந்து சேர்ந்தது.
இன்று இரவுக்குள் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கபினியிலிருந்து தொடர்ந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருவதால் நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அப்போது பரிசல்களும், வலைகளும் வௌ்ளத்தால் சேதம் அடையும் அபாயம் உள்ளது. இதனால் மேட்டூர் நீர் தேக்கத்தில் காவிரி கரைகளில் முகாமிட்டு மீன் பிடித்து வரும் மீனவர்கள் காவிரி கரையில் கவிழ்த்து வைத்திருந்த தங்கள் பரிசல்களையும், வலைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச்சென்றனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர் மட்டம் 103.40 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 31,122 கனஅடியாக இருப்பதால் கிருஷ்ணராஜசாகர் அணை விரைவில் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறக்கப்படும். கபினியின் நீர் மட்டம் 65 அடியாகும்.
இன்று அணையின் நீர் மட்டம் 63.71 அடியாகவும் நீர் வரத்து 27,988 கனஅடியாகவும் நீர் இருப்பு 18.68 டி.எம்.சியாகவும் உள்ளது. கேரளத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் உபரி நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்படும் இந்த உபரி நீர் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வரும். இதனால் ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது என்று நீர்வளத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Today (August 4), the waters of the Cauvery are flowing between the hills at Adippalaru—the confluence point of the Cauvery and Palar rivers.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.