ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித் திட்டம்: ரூ. 56.72 கோடி நிதி!
அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித்தொகைத் திட்டத்துக்காக ரூ. 56.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித்தொகைத் திட்டத்துக்காக ரூ. 56.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர். வினோத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கான பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 2026 -27 ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் இன்று (ஆக. 6) சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
தமிழ்நாடு தளிர் கீரைகள் திட்டத்துக்கு ரூ. 1.20 கோடி, பயிர்கள் உற்பத்தி அதிகரிப்புக்கு ரூ. 41 கோடி, தென்னை விவசாயிகள் சிறப்புத் திட்டத்துக்கு ரூ. 16 கோடி, தென்னை நோய் தடுப்பு திட்டத்துக்கு ரூ. 1 கோடி, தென்னை டானிக் திட்டத்துக்கு ரூ. 6.20 கோடி, பயறு வகைகள், எண்ணெய்வித்துப் பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கத்துக்காக ரூ. 203.64 கோடி என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதனைத் தொடர்ந்து தென்னை பதப்படுத்தும் கழகத்துக்கு ரூ. 22 கோடி, தென்னை சிறப்புத் திட்டத்துக்கு ரூ. 41 கோடி, காளான் உற்பத்திக்கூடங்களுக்கு ரூ. 50 லட்சம், வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைக்க ரூ. 22 கோடி, மருத்துவப் பயிர்கள் சாகுபடி ஊக்குவிப்பு திட்டத்துக்கு ரூ. 1.51 கோடி என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன்பெறும் வகையில் அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித்தொகைத் திட்டத்துக்காக ரூ. 56.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர். வினோத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் ஆர். வினோத் நிதி நிலை அறிக்கையை வாசிக்கையில், “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் திட்டப்பலன்களைத் தடையின்றி அடையவும், நீராதாரங்களை உருவாக்கி உற்பத்தியை அதிகரித்து வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திக் கொள்ளவும், அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ. 56.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் பயனாளி பங்களிப்புத் தொகை அவர்களுக்கு பெறும் சுமையாக இருப்பதால் அவர்களின் சுமையைக் குறைத்து திட்டங்களின் பயனை அடையும் வண்ணம் இத்திட்டத்தில் 20 சதவிகித கூடுதல் மானியம் வழங்கப்படும்.
இதன்படி, மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள், பண்ணை இயந்திரங்கள் போன்றவற்றுக்கு 70 சதவிகிதம் மானியமும், சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைத்திட 80 சதவிகிதம் மானியமும் வழங்கப்படும்.
நீர் பாசன வசதி இல்லாத 300 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் புன்செய் நிலங்களில் நீர் ஆதாரத்துக்காக ஆழ்த்துளை அல்லது குழாய் கிணறுகள் 100 சதவிகித மானியத்தில் மின்மோட்டர் அல்லது சூரிய சக்தி பம்புகளுடன் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Minister R. Vinoth stated that an allocation of ₹56.72 crore has been made in the Tamil Nadu Agriculture Budget for the Annal Ambedkar Agriculture Assistance Scheme.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.