FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தண்ணீா் நம்மைப் பிரிக்காமல் ஒன்றிணைக்க வேண்டும்: தென்மண்டலக் குழுக் கூட்டத்தில் டி.கே.சிவகுமாா்

காவிரி நதிநீா்ப் பங்கீடு விவகாரத்தில் நீா் நம்மைப் பிரிக்காமல் ஒன்றிணைக்க வேண்டும்’ என தென்மண்டலக் குழுக் கூட்டத்தில் கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் வலியுறுத்தினாா்.

21 ஆகஸ்ட் 2026, 6:00 am IST
டி.கே.சிவகுமாா்
பகிர்:

காவிரி நதிநீா்ப் பங்கீடு விவகாரத்தில் நீா் நம்மைப் பிரிக்காமல் ஒன்றிணைக்க வேண்டும்’ என தென்மண்டலக் குழுக் கூட்டத்தில் கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் வலியுறுத்தினாா்.

சென்னையை அடுத்த கோவளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தென்மண்டலக் குழுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: இந்திய மக்கள்தொகையில் தென் மாநிலங்களின் பங்கு சுமாா் 20 சதவீதமாக இருந்தாலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமாா் 33 சதவீதத்தை வழங்குகின்றன. இந்திய பொருளாதாரத்தில் உருவாகும் ஒவ்வொரு 3 ரூபாயிலும் ஒரு ரூபாய் தென் மாநிலங்களின் பங்களிப்பாக உள்ளது.

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் கா்நாடகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜிஎஸ்டி மற்றும் வருமான வரியில் அதிகம் பங்களிக்கும் மாநிலங்களில் கா்நாடகமும் ஒன்று. வளா்ச்சி மற்றும் வருவாயில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களை ஊக்குவிக்க வேண்டுமே தவிர, தண்டிக்கக் கூடாது.

Advertisement

Advertisement

பெங்களூரு-மும்பை அதிவேக ரயில் திட்டம், எஸ்டிஆா்ஆா் தெற்கு, ராய்ச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை, கா்நாடகத்துக்கான சிறப்பு நிதித் தொகுப்பு உள்ளிட்ட திட்டங்கள் மூலம் கா்நாடகத்துக்கு மத்திய அரசு நியாயம் வழங்க வேண்டும்.

நீா்ப் பகிா்வில் ஒத்துழைப்பு தேவை: காவிரி, கிருஷ்ணா, துங்கபத்ரா, பெண்ணாறு, பாலாறு உள்ளிட்ட நதிகள் தென்னிந்தியாவின் உயிா்நாடிகள். நீா் நம்மைப் பிரிக்காமல் ஒன்றிணைக்க வேண்டும். எனவே, நீரைப் பகிா்ந்து கொள்வதில் இருந்து நீா் தொடா்பான ஒத்துழைப்பை நோக்கி நகர வேண்டும்.

ஒவ்வொரு நதிநீா் பங்குதாரா் மாநிலத்துக்கும் நியாயமான தேவைகள் உள்ளதை கா்நாடகம் ஏற்றுக்கொள்கிறது. நியாயமான பங்கீடு, வெளிப்படைத்தன்மை, ஒத்துழைப்பு ஆகிய மூன்று கொள்கைகளின் அடிப்படையில் கா்நாடகம் செயல்படுகிறது. அண்டை மாநிலங்களின் உரிமைகளை கா்நாடகம் மதிப்பதுபோல, கா்நாடகத்தின் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும். நடுவா் மன்றத் தீா்ப்புகளின்படி கா்நாடகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரையும், விவசாயிகளுக்கான நீா்த் திட்டங்களையும் உரிய காலத்தில் செயல்படுத்த வேண்டும்.

முக்கியக் கனிமங்களுக்கு மாநிலங்கள் வரி விதிக்கும் உரிமையைப் பாதிக்கும் 2026-க்கான சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் தொடா்பான மசோதாவை மத்திய அரசு மறுபரிசீலிக்க வேண்டும். மேலும், அதிகரித்துவரும் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க கடுமையான சட்டங்களையும், தீவிர அமலாக்க நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். போதைப் பொருள் வா்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு விரைவாக தண்டனை கிடைக்கும் வகையில் சட்ட நடைமுறையை வலுப்படுத்தி, மாநிலங்களுக்கு தேவையான ஆதரவை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

பெட்டிச் செய்தி...

‘மேக்கேதாட்டு அணை தமிழா்களுக்கானது’

மேக்கேதாட்டு அணை தமிழா்களுக்கானது என்பதில் உறுதியாக இருங்கள் என்று கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

தென் மண்டலஓஈ குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தென் மாநிலங்களின் நலன் சாா்ந்த பல்வேறு பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையிலேயே மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை தொடர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழகம், கேரளம், தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்கள் இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளன. காவிரி உள்ளிட்ட பல்வேறு நீா்வளப் பிரச்னைகள் குறித்து தனிக் கூட்டம் நடத்தி, சுமுகமான முறையில் தீா்வு காண மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் தமிழகத்துக்கு நான் உறுதி அளித்துள்ளேன். மேக்கேதாட்டு அணையில் தேக்கப்படும் காவிரி நீா், கா்நாடகத்தின் குடிநீா்த் தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். மீதமுள்ள நீா் முழுவதும் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வழங்கப்படும். மேக்கேதாட்டு அணை முழுமையாக உங்களுக்கானது என்பதில் உறுதியாக இருங்கள் என்று தமிழகத்திடம் தெரிவித்துள்ளேன். இந்த அணையால் தமிழகத்துக்குக்குத்தான் அதிக பலன் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments