ஒரு வாக்கில் தோல்வி: வழக்கை வாபஸ் பெற்றார் கே.ஆர். பெரியகருப்பன்!
சிவகங்கை திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார்..
தொகுதி மாறி அனுப்பப்பட்ட தபால் வாக்கை மீட்டு மறு எண்ணிக்கை கோரி தாக்கல் செய்திருந்த வழக்கை, திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் பெரியகருப்பன் திரும்பப் பெற்றுள்ளார்.
சிவகங்கை - திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதால், அந்த வாக்கை மீட்டு மறு எண்ணிக்கை நடத்தக் கோரி, ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன், கடந்த மே மாதம் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ளிட்ட வாக்களிக்கும் நடவடிக்கைகளில் பங்கேற்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
மேலும், சிவகங்கை - திருப்பத்தூர் தொகுதியில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், தபால் வாக்குகள், நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பெற்று பாதுகாக்க வேண்டும் எனவும், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்கு வந்ததாகக் கூறப்படும் தபால் வாக்கை, பிரிக்காமல் சீல் வைத்து பாதுகாக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
சீனிவாச சேதுபதி வெற்றியை எதிர்த்து பெரியகருப்பன் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், தொகுதி மாறி அனுப்பப்பட்ட தபால் வாக்கை மீட்டு, மறு எண்ணிக்கை கோரி கடந்த மே மாதம் தாக்கல் செய்த வழக்கை திரும்பப் பெற, பெரியகருப்பன் தரப்பில் அனுமதி கோரப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று, வழக்கை திரும்பப் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வு உத்தரவிட்டது.
Defeated by a single vote: K.R. Periyakaruppan withdrew the case
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.