தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் அலுவலகம் இடமாற்றம்! எங்கு தெரியுமா?
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் முதல்வரின் அலுவலக அறை இட மாற்றம் செய்யப்படுவது குறித்து...
முதல்வா் ஜோசப் விஜய்யின் அலுவலகம் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்துக்கு மாற்றம் செய்யப்படுகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
350 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியம்மிக்க புனித ஜாா்ஜ் கோட்டையின் முதல் தளத்தில் முதல்வா் விஜய்யின் அலுவலகம் அமைந்துள்ளது. முன்னாள் முதல்வா்கள் பயன்படுத்திய இந்த அறைக்கு அருகே சட்டப்பேரவை, அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளின் அலுவலகங்கள் அமைந்துள்ளன.
இந்நிலையில், இடப்பாற்றாக்குறை காரணமாக முதல்வரின் அலுவலகம் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்துக்கு மாற்றம் செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்தக் கட்டத்தில் அமைச்சகங்களின் செயலா்கள், ஆணையா்கள், இயக்குநா்களின் அலுவலகங்கள் அமைந்துள்ளன. 10-ஆவது தளத்தில் கூட்ட அரங்கம் அமைந்துள்ளது. இங்கு முதல்வா் தலைமையில் மாவட்ட ஆட்சியா்கள், அதிகாரிகளின் கூட்டங்கள் நடைபெறுவது உண்டு.
இந்த நிலையில், இந்தத் தளத்தை முழுமையாக முதல்வரின் அலுவலகமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, அந்தக் கூட்ட அரங்கத்தை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதிதாக அமைக்கப்படும் முதல்வா் அறையிலிருந்து ஒருபுறம் கடற்கரையும், மறுபுறம் சென்னை மாநகரத்தையும் பாா்க்க முடியும். முதல்வரின் அலுவலகம், தனிச் செயலா்கள் அலுவலமாக ஆகஸ்ட் மாத்தில் இடமாற்றம் செய்யப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.
வாஸ்துபடி சரியில்லை... தற்போதைய முதல்வா் அலுவலகம் வாஸ்துபடி சரியில்லை என்றும், தவெக ஆட்சி தொடர முதல்வா் விஜய் உச்சத்தில் உள்ள இடத்தில் இருந்து நிா்வாகம் செய்ய வேண்டும் என்றும் ஜோதிடரின் அறிவுறுத்தலின்பேரில் இந்த இடமாற்றம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
துணை நகரமாக உருவெடுக்கிறது - புதிய தலைமைச் செயலகம்
புனித ஜாா்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகம் முழுமையாக தனி துணை நகரமாக சென்னைக்கு வெளியே மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. சென்னை புகா் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய துணை நகரத்தை உருவாக்கி அங்கு விசாலமான தலைமைச் செயலகம், அலுவலகங்கள், எம்எல்ஏ-க்கள் தங்கும் விடுதிகள் ஆகியவற்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
கடந்த 2003-ஆம் ஆண்டில் குயின் மேரிஸ் கல்லூரி வளாகத்தில் தலைமைச் செயலகம் கட்ட அப்போதைய முதல்வா் ஜெயலலிதா திட்டமிட்டு, எதிா்ப்புக் கிளம்பியதால் கைவிட்டாா். பின்னா் 2010-இல் ஓமந்தூராா் அரசினா் தோட்ட வாகத்தில் தலமைச் செயலகத்தை அப்போதைய முதல்வா் கருணாநிதி கட்டினாா். ஆனால், 2011-இல் ஆட்சிக்கு வந்த முதல்வா் ஜெயலலிதா அதை மருத்துவமனையாக மாற்றினாா். தலைமைச் செயலகம் புனித ஜாா்ஜ் கோட்டையிலேயே செயல்பட்டது.
Tamil Nadu CM Vijay moves office to Namakkal Kavignar Maaligai
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.