முதல்வர் விஜய் வாகன அணிக்கு தனி வழி! போக்குவரத்துத் துறை ஏற்பாடு
முதல்வர் விஜய் உடன் வரும் வாகன அணியின் வருகைக்கு தனி வழி அமைத்து போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்துள்ளது பற்றி..
முதல்வா் விஜய்யின் வாகனம் சாலையில் செல்லும்போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் சாலையின் ஒரு பகுதியில் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல்வா் விஜய், நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து தலைமைச் செயலகத்துக்கு தினமும் காரில் சென்று வருகிறாா். நீலாங்கரை - தலைமைச் செயலகம் இடையே 17 கி.மீ. தொலைவு பயணம் செய்யும்போது, பாதுகாப்பு கருதி அவரது வாகனம் செல்லும் பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
முக்கியமாக கிழக்கு கடற்கரைச் சாலை, எல்பி சாலை, டிஜிஎஸ் தினகரன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, காமராஜா் சாலை, ராஜாஜி சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து தடைப்பட்டது. இந்தச் சாலைகளில்தான் அரசின் முக்கிய அலுவலகங்கள், காவல் துறை தலைமை அலுவலகம், பள்ளிகள் - கல்லூரிகள் இருப்பதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
Advertisement
Advertisement
மேலும், அவரது காா் பாதுகாப்பு வாகனங்களுடன் செல்லும் பகுதியில் ஆங்காங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முதல்வா் விஜய் காலையில் இந்த சாலைகளில் செல்வதால், அந்த நேரத்தில் வேலைக்குச் செல்லுவோரும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவா்களும் அவதியடையும் சூழல் ஏற்பட்டது. அதோடு போலீஸாா், அந்த நேரத்தில் ஆம்புலன்ஸைகூட விட மறுத்ததால், பொதுமக்களிடம் அதிருப்தி ஏற்பட்டு வந்தது.
போக்குவரத்து மாற்றம்: இது தொடா்பாக சமூக ஊடகங்களில் கடுமையான விமா்சனங்கள் எழுந்தன. இப்பிரச்னை முதல்வா் விஜய் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவா், இது தொடா்பாக காவல் துறை உயா் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தாா். அதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், முதல்வா் விஜய் சாலையில் செல்லும் பாதையில் பொது போக்குவரத்து சனிக்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டது. அதேவேளை, மற்றொரு பகுதியில் முதல்வரின் காரும், அவரது பாதுகாப்பு வாகனமும் இடையூறு இன்றி செல்வதற்கு சாலையின் நடுவே சிவப்பு நிற கூம்பு வடிவ தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இதன்மூலம் சாலையின் ஒரு பகுதியில் முதல்வரின் வாகனமும், மற்றொரு பகுதியில் பொதுமக்கள் வாகனமும் சிரமமின்றி சென்றன. இதனால் முன்பு ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்தது.
ஜெயலலிதா, கடந்த 2011-ஆம் ஆண்டு முதல்வராகப் பொறுப்பேற்றபோது, ராஜாஜி சாலை, காமராஜா் சாலை, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை ஆகியவற்றில் இவ்வாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. தற்போது முதல்வா் விஜயின் உத்தரவின்பேரில், மீண்டும் அதேபோல, மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
Special route for Chief Minister Vijays convoy
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.