சூடுபிடிக்கும் பாஜகவின் சதுரங்க வியூகம்!
அதிமுக-பாஜக கூட்டணியில் எந்தவித மாற்றமும் இல்லை என்றாலும், பாஜக-தவெக நெருக்கம் பாஜகவின் அணுகுமுறையிலும், கூட்டணியிலும் மாற்றம் ஏற்படுத்தக் கூடும்.
மத்திய இணையமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளில் இருந்து எல்.முருகன் திடீரென விலகியிருப்பது தேசிய அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் அவசியத்தை முருகனின் பதவி விலகல் நிகழ்வு மேலும் வலுப்படுத்தியுள்ளது.
வரவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தின் முன்னோட்டமாகப் பார்க்கப்படும் இந்த நகர்வுக்குப் பின்னால் பாஜகவின் மிக வலுவான 'சதுரங்க வியூகம்' ஒளிந்திருப்பதை அக்கட்சியின் மேலிட வட்டாரங்களில் விசாரித்தபோது நம்மால் உறுதிப்படுத்த முடிந்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் 2.0 மற்றும் 3.0 அமைச்சரவைகளில் முக்கியத் துறைகளைக் கையாண்ட எல்.முருகன், தனது பதவிகளைத் தாமாக முன்வந்து ராஜிநாமா செய்துள்ளதாக எழுத்துபூர்வமாகவும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகள் மூலமாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்மூலம், ஜார்ஜ் குரியன், ரவ்நீத் சிங் பிட்டு வரிசையில் அமைச்சரவையிலிருந்து வெளியேறும் மூன்றாவது இணை அமைச்சராகியிருக்கிறார் முருகன்.
Advertisement
Advertisement
பாஜகவில் 2020, ஆகஸ்டில் கே.அண்ணாமலை சேர்ந்தது முதல் அவருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும், அதே வேகத்தில் அவர் மாநிலத் தலைவராகி சட்டப்பேரவைத் தேர்தல், மக்களவைத் தேர்தல் ஆகியவற்றை வழிநடத்தி பிறகு அக்கட்சியில் இருந்தும் விலகிய காட்சிகளும் அரங்கேறின. அதன் பிறகு பாஜக மாநிலத் தலைவர் பதவி தனக்கு வழங்கப்படும் என முருகன் பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால், நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக்கப்பட்டதால், கட்சியின் அமைப்பு ரீதியிலான புதிய நியமனங்களில் முருகனுக்குரிய வாய்ப்புகள் சுருங்கின.
சோதனைக் காலம்
'2021' சட்டப்பேரவைத் தேர்தலில் தாராபுரம் தொகுதி, '2024' மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதி மற்றும் இந்த ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அவிநாசி தொகுதியில் போட்டியிட்டு தோல்விகளைத் தழுவி, தமிழகத்தில் தனது சமூக அடித்தளத்தை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு முருகன் தற்போது தள்ளப்பட்டுள்ளார். இந்தப் பின்னணியில்தான், பாஜகவின் 'ஒரு நபர் - ஒரு பதவி' கோட்பாட்டின் அடிப்படையில், தில்லி அதிகார மையத்திலிருந்து விலகி முழுமையாகத் தமிழக களத்துக்கு முருகன் திரும்பியிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
தலைமை வியூகம்
எல்.முருகன் 2030-ஆம் ஆண்டுவரை பதவிக் காலம் கொண்ட மாநிலங்களவை உறுப்பினர் பதவியை முழுமையாக ராஜிநாமா செய்துள்ளதன் மூலம், அந்த இடத்துக்கு உடனடியாக ஒரு புதிய மூத்த தலைவரை அமர வைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த முன்னேற்றத்தை அலசும் அரசியல் ஆய்வாளர்கள், 'கட்சிப் பணியாற்ற விரும்பும் ஒரு மத்திய அமைச்சர், அந்தப் பதவியைத் துறக்க முடிவெடுத்து ராஜிநாமா செய்வது வேண்டுமானால் அவரது தனிப்பட்ட முடிவாக இருக்கலாம். ஆனால், கூடுதலாக மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் அவர் ராஜிநாமா செய்வதென்பது தனிப்பட்ட முறையில் அவரால் மட்டுமே எடுக்கக்கூடிய முடிவாக இருக்கவே முடியாது' எனச் சுட்டிக்காட்டுகின்றனர்.
முருகனை மாநிலங்களவைக்கு அனுப்பி வைத்த மத்திய பிரதேசத்தில், பாஜக ஆட்சியில் இருப்பதுடன், சட்டப்பேரவையிலும் எண்ணிக்கை பலத்துடன் இருக்கிறது. எனவே, அங்கு காலியானதாக அறிவிக்கப்படும் மாநிலங்களவை இடத்தில் பாஜக எவரையும் நிறுத்தி வெற்றி பெற்றுவிட முடியும். அந்த வகையில், முருகனின் மீதமுள்ள நான்கு ஆண்டு பதவிக் கால மாநிலங்களவை இடத்துக்கான தேர்தலில் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மிக வலுவான முகமாக நிறுத்தப்படக் கூடும் என்கின்றன பாஜக மேலிட வட்டாரங்கள்.
தேர்தல் சதுரங்கம்
உத்தர பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான ஹர்தீப் சிங் புரியின் பதவிக் காலம் வரும் நவ. 25-ஆம் தேதி நிறைவடைகிறது. அந்த மாநிலத்தில் சமீபத்தில் காலியான இடங்களில் புரியின் பெயர் பரிந்துரைக்கப்படாதபோதிலும், மத்திய அமைச்சராக அவர் நீடித்து வருகிறார்.
இந்தப் பின்ணியில்தான் முருகனின் ராஜிநாமாவால் காலியாகப்போகும் மாநிலங்களவை இடத்தில் இருந்து ஹர்தீப் சிங் புரி மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படலாம். இதன்மூலம், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அரசியல் ஆதாயம் தேட முடியும்.
ஹர்தீப் சிங் புரி மத்திய அமைச்சரவையில் தொடர்வது, பாஜகவுக்கு மிகவும் அவசியமான ராஜதந்திரமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சீக்கிய சமூகத்தின் மத்தியிலான இவரது நேரடி செல்வாக்கும், ஆம் ஆத்மி மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை திறம்பட எதிர்கொள்ளும் அவரது ஆற்றலும் மோடி அமைச்சரவைக்கும், பஞ்சாப் பேரவைத் தேர்தல் பரப்புரைக்கும் அதிகம் தேவைப்படுகிறது. எனவேதான், இந்தச் சதுரங்க ஆட்டத்தில் பாஜக மேலிடம் மிகத் துல்லியமாக காய்களை நகர்த்தி வருகிறது.
என்னவாகும் தமிழக பாஜக?
அண்ணாமலையின் விலகலுக்குப் பிறகு பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் இணக்கமாகச் செயல்பட்டு வருகிறார். மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தேவைப்படும்வரை, அக்கட்சியுடன் நெருக்கம் பாராட்டி வரும் நயினார் நாகேந்திரனின் தலைமையிலும் பாஜக மேலிடம் எந்த மாற்றத்தையும் செய்யாது. அவரை மாநில ஆளுநர் அல்லது வேறு பதவிக்கு நியமிக்கும் எண்ணம் பிரதமருக்கு இல்லை என்கிறது பாஜக மேலிட வட்டாரம்.
இதேபோல, முருகனையும் மாநில ஆளுநராக்கும் திட்டம் பிரதமருக்கு இல்லை என்கிறது அவரது அலுவலக வட்டாரம். இந்த விஷயத்தில் மேற்கொண்டு கருத்து தெரிவிப்பதை தவிர்ப்பவராக முருகன் இருக்கிறார்.
தமிழக பாஜக தலைவர் பதவிக்கு முக்குலத்தோரில் இருந்து நயினார் நாகேந்திரன், கவுண்டர் சமூகத்தில் இருந்து சி.பி.ராதாகிருஷ்ணன், அண்ணாமலை, அருந்ததியர் சமூகத்தில் இருந்து முருகன், நாடார் சமூகத்தில் இருந்து பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், என்.எஸ். சந்திரபோஸ், பிராமண சமூகத்தில் இருந்து இல. கணேசன் என பலர் நியமிக்கப்பட்ட நிலையிலும், எந்தவொரு சமுதாயத்திலும் பாஜகவால் தன்னை வலிமையாக நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை.
அதனால், பாஜக புதிய அணுகுமுறையைக் கையாளக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைக்கு அதிமுக-பாஜக கூட்டணியில் எந்தவித மாற்றமும் இல்லை என்றாலும், பாஜக-தவெக நெருக்கம் பாஜகவின் அணுகுமுறையிலும், கூட்டணியிலும் மாற்றம் ஏற்படுத்தக் கூடும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.