தனியார் மருத்துவமனை போன்று! மருத்துவரை சந்திக்க முன்பதிவு வசதி!
அரசு மருத்துவமனையில் மருத்துவரை சந்திக்க முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது தொடர்பாக...
தனியார் மருத்துவமனைகளைப்போல, எந்த நாளில், எந்த நேரத்தில் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே பதிவு செய்யும் வசதி அரசு மருத்துவனையிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட பராமரிப்பு ஹீமோடையாலிசிஸ் மையம், மேம்படுத்தப்பட்ட மத்திய உணவுக் கூடம், பிற மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நவீன உபகரணங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் திறந்து வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்ததாவது:
Advertisement
Advertisement
”நலம் ஏஐ வாட்ஸ்ஆப் சாட்பாட் சேவை மூலம், அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையை மாற்றுவதற்காகவே இந்த முன்பதிவு(அப்பாயின்மென்ட்) வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளைப் போல, எந்த நாளில், எந்த நேரத்தில் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு வரலாம்.
இதனால் 4 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கும் மருத்துவமனை நிர்வாகத்திற்கும் வசதியாக இருக்கும்.
அப்பாயின்மென்ட் இல்லாமலும் மருத்துவமனைக்கு வரலாம். ஆனால், முன்பதிவு செய்து வந்தால், காத்திருப்பு நேரம் குறைந்து, சிகிச்சையை எளிதாகப் பெற முடியும்.
எனவே, பொதுமக்கள் இந்த முன்பதிவு வசதியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மருத்துவக் காப்பீட்டு அட்டை வைத்திருக்கும் நோயாளிகளுக்கு, மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுக்கக் கூடாது. காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்படும் தொகை குறைவாக இருப்பதாகக் கூறி சிகிச்சையை மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
இதுகுறித்து மருத்துவமனைகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். மக்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பார்வையாளர்கள் நேரம் அனைத்து மருத்துவமனைகளிலும் படிப்படியாக கொண்டு வரப்படும். நோயாளிகளுக்கு உணவு கொண்டு வரும்போது பிளாஸ்டிக் பொருள்களில் கொண்டு வர வேண்டாம்.
முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் உச்சவரம்பு இருந்தாலும் தேவைப்படுபவர்களுக்கு காப்பீடு திட்டம் வழங்கப்பட்டுதான் வருகிறது” என்றார்.
Minister for Health and Family Welfare K.G. Arunraj has announced that a facility to pre-book appointments with doctors specifying the date and timehas been introduced in government hospitals, similar to the system in private hospitals.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.