அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர்கள், ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியது பற்றி...
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் பணிகளைப் புறக்கணித்து இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.
பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்கிடவும், 2012 ஆண்டு முதல் ஓய்வூதியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ள பணப்பயன்களை வழங்கிடவும், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஆசிரியர், ஊழியர்களுக்கான பதவி உயர்வுகள் மற்றும் நிலுவையில் உள்ள 7 -வது ஊதியக்குழு நிலுவைத் தொகைகள் உள்ளிட்ட பணப்பயன்களை வழங்கிடவும்,
தொகுப்பூதியர், என்எம்ஆர் மற்றும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும். சிறப்பு மற்றும் தொடர்பு அதிகாரிகளுக்கு வருடாந்திர ஊக்கத்தொகை மற்றும் 7 -வது ஊதியக்குழு ஊதியம் போன்றவற்றை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கடந்த ஆக.19 -ம் தேதி முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதுநாள் வரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், இன்று செப்.15-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து துறைகளும் மூடப்பட்டது. வகுப்புகள் எதுவும் நடைபெறாததால் மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். பணிகள் எதுவும் நடைபெறவில்லை. பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் மற்றும் தேர்வு துறை அலுவலகம் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தது.
பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் முன்பு ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சி. சுப்பிரமணியன் தலைமையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருங்கிணைப்பாளர் சி. சுப்பிரமணியம் பேசுகையில் ஆசிரியர், ஊழியர்களின் ஊதிய மறு நிர்ணய சதியை (Salary Re Fixation) முறியடிக்க வேண்டும். தணிக்கை தடை என்ற பெயரில் ஆசிரியர், ஊழியர்களுக்கு எதிரான பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும். பணி இறுதி மாத ஊதிய அடிப்படையில் மாத ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்றார்.
போராட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் ஆ. ரவி, ஊழியர் சங்க முன்னாள் தலைவர்கள் மதியழகன், மனோகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Annamalai University teachers and staff on indefinite strike
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.