FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடுக! - மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிடுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திருப்பது குறித்து...

19 செப்டம்பர் 2026, 1:16 pm IST
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை விமான நிலையத்தை நிர்வகித்து வரும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் இடத்தில் வேறு ஒரு இயக்குநரை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பது, சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்கும் முயற்சியாகும். இந்த நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

Advertisement

Advertisement

சென்னை விமான நிலையம் ஒரு சாதாரண வணிக நிறுவனம் அல்ல. அது தனிநபர் சொத்தல்ல, மக்களின் பொதுச்சொத்தாகும். நாட்டின் முக்கியமான பொது உள்கட்டமைப்பாகும். தமிழ்நாட்டின் தொழில், வர்த்தகம், சுற்றுலா மற்றும் சரக்கு போக்குவரத்தின் முக்கியமான பங்களிப்பை அது செலுத்துகிறது.

தனியார்மயமாக்குதல் தீர்வல்ல

சென்னை விமான நிலையத்தில் நிர்வாகக் குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்ய வேண்டும். பயணிகள் சேவை, விமான இயக்கம், சரக்கு கையாளுதல், சாலை இணைப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்த வேண்டும். அதைவிடுத்து, விமான நிலையத்தை தனியார்மயமாக்குதல் அதற்கு தீர்வல்ல.

இந்திய விமான நிலைய ஆணையம் நாடு முழுவதும் விமான நிலையங்களை இயக்குவதன் மூலம் குறிப்பிடத்தக்க வருவாயும் லாபமும் ஈட்டி வருகிறது. 2025-26 நிதியாண்டில்இந்திய விமான நிலைய ஆணையத்தின் நிகர லாபம் ரூ.6,522 கோடியாக இருந்ததாக அதன் நிதிநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை விமான நிலையமும் 2024-25ல் இந்திய விமான நிலைய ஆணையம் நிர்வகிக்கும் விமான நிலையங்களில் அதிக லாபம் ஈட்டிய விமான நிலையங்களில் இரண்டாவது இடத்தில் இருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன் லாபம் சுமார் ரூ.492.48 கோடி என தரவுகள் காட்டுகின்றன.

அவசியமற்றது

அப்படியிருக்க, லாபகரமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனமான சென்னை விமான நிலையத்தை தனியார் நிர்வாகத்திடம் ஒப்படைப்பது அவசியமற்றது.

பொதுமக்களின் பணத்தில் உருவாக்கப்பட்ட, சென்னை விமான நிலையத்தின் உள்கட்டமைப்பால் கிடைக்கும் வருவாயும், லாபமும் அரசின் பொதுவளமாகத் தொடர வேண்டும். தனியார் நிறுவனத்தின் லாபமாக மாற்றப்படக் கூடாது.

சென்னை விமான நிலையம் தமிழ்நாட்டின் தொழில் மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி பொருளாதாரத்திற்கு முக்கியமான சரக்கு போக்குவரத்து மையமாகும்.

இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, சென்னை விமான நிலைய சரக்கு முனையம் இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் சரக்கு இடமாற்றங்களை கையாள்கிறது.

தற்போது சரக்கு முனையத்தில் நெரிசலைக் குறைக்க 19.06 ஏக்கர் நிலத்தை ரூ.278 கோடிக்கு கிகிமி பெறும் நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் சரக்கு அனுப்பும் முகவர்கள் எதிர்கொள்ளும் தாமதங்களைத் தீர்ப்பதே இதன் நோக்கம்.

மேலும், சென்னை விமான நிலையத்தின் சரக்கு இயக்கத்தை மேம்படுத்த 5.2 கி.மீ சரக்கு வழித்தடம் உள்ளிட்ட திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. பயணிகள் விமானங்களில் கொண்டு செல்லப்படும் சரக்கு ஏற்றுமதி சென்னை விமானச் சரக்குப் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

எனவே, விமான நிலையத்தை, தனியார் லாப நோக்கில் இயக்குவது என்பது, பயணிகள் சேவை தொடர்பான பிரச்சினை மட்டும் அல்ல. அது, தமிழ்நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி, தொழில் வளர்ச்சி மற்றும் சரக்கு விநியோகச் சங்கிலியுடனும் தொடர்புடைய பிரச்சினையாகும்.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்தி ஐந்தாவது முனையத்தை அமைப்பதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொத்தப் பயணிகள் கையாளும் திறனை ஆண்டு தோறும் 5.5 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் 5-வது முனையம் திட்டம் இன்னும் ஆரம்பக் கருத்தாக்க நிலையிலேயே இருப்பதாகவும், முழுமையான தொழில்நுட்ப மற்றும் போக்குவரத்து ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேசவிரோதச் செயல்

பொதுத்துறை திட்டமிடப்பட்டு, பொதுமுதலீடு செய்யப்பட்டு, உள்கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. அதன் பலனை தனியார் லாபத்திற்கு விடுவது தேசவிரோதச் செயலாகும்.

பரந்தூரில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. அது வரவேற்கத்தக்கது. ஆனால் விவசாய நிலத்தைப் பாதுகாப்பது மட்டும் பொதுநலன் அல்ல. மாறாக, பொதுச்சொத்து, பொதுத்துறை நிறுவனங்கள், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் அரசின் வருவாயையும் பாதுகாப்பதே பொதுநலனாகும்.

ஏற்க முடியாது

தமிழ்நாட்டிற்கு நவீன விமான நிலையம் வேண்டும். பயணிகளுக்கு உலகத்தரமான வசதிகள் வேண்டும். சரக்குப் போக்குவரத்து வேகமாகவும் திறமையாகவும் நடைபெற வேண்டும். விமான நிலையத்தின் திறன் விரிவுபடுத்தப்பட வேண்டும். ஆனால் நவீனமயமாக்கலுக்கு தனியார்மயமாக்கல் அவசியம் என்ற வாதத்தை ஏற்க முடியாது.

இந்திய விமான நிலைய ஆணையத்தின் நிர்வாகக் குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்ய வேண்டும். தேவையான அதிகாரம், முதலீடு, தொழில்நுட்ப வசதி மற்றும் நிர்வாகத் திறன் வழங்கப்பட வேண்டும்.பொதுச்சொத்தை தனியார் லாபத்திற்காக ஒப்படைப்பது வளர்ச்சி அல்ல.

திரும்பப் பெற வேண்டும்

பொதுத்துறை விமான நிலையத்தை வலுப்படுத்துவதே மாற்று வழி. தமிழ்நாடு அரசு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

சென்னை விமான நிலையத்தை இந்திய விமான நிலைய ஆணையத்தின் பொதுத்துறை நிர்வாகத்தின் கீழேயே நவீனப்படுத்தி விரிவுபடுத்த வேண்டும் , இதன் மூலமே இட ஒதுக்கீட்டுடன் கூடிய வேலைவாய்ப்புகளையும், சமூக நிதியையும் காக்க முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

summary

Abandon the move to privatize Chennai Airport! – M. Veerapandian urges.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments