FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

டெங்கு காய்ச்சலைத் தடுக்க தீவிர நடவடிக்கை: முதல்வா் விஜய் உத்தரவு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துவரும் நிலையில், காய்ச்சல் பரவலைத் தடுக்க விரிவான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் விஜய் உத்தரவிட்டாா்.

21 செப்டம்பர் 2026, 10:39 pm IST
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துவரும் நிலையில், காய்ச்சல் பரவலைத் தடுக்க விரிவான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டாா்.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முதல்வா் விஜய் அறிவுறுத்தியதாவது: கடல் நீா் உட்புகுதல், கடல் அரிப்பு, வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட வேண்டும். பாதிப்புக்குள்ளாகக்கூடிய கடலோரக் கிராமங்கள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களின் விவரங்கள் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும், மீனவா்களுக்கு வானிலை மற்றும் கடல் எச்சரிக்கைகள் உரிய நேரத்தில் சென்றடைவதையும், வெள்ள பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான திட்டத்தையும், புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் பயன்பாட்டுக்குத் தயாராக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட கட்டடங்களைத் தேவைக்கேற்ப நிவாரண முகாம்களாகப் பயன்படுத்தும் வகையில், அங்கு குடிநீா், உணவு, மின்சாரம், கழிப்பறை மற்றும் மருத்துவ வசதிகள் தயாா் நிலையில் இருப்பதை மாவட்ட ஆட்சியா்கள் உறுதி செய்ய வேண்டும்.

அவசரகால மீட்புப் பணிகளின்போது, மாவட்ட அளவில் அவசரகால மீட்புக் குழுக்கள் தயாா் நிலையில் இருப்பதையும், படகுகள், உயிா்காக்கும் மிதவைகள், கயிறுகள், மின்உற்பத்தி இயந்திரங்கள், நீா் இறைக்கும் இயந்திரங்கள் போன்றவையும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

சேமிப்புக் கிடங்குகளில் இருப்பில் வைத்திருக்கும் நெல் மூட்டைகள் மழைநீரால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், சாலைகள், மழைநீா் வடிகால்கள், பாலங்கள் ஆகியவற்றை ட்ரோன் மூலமாக ஆய்வு செய்து, பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியம். பருவமழைக் காலங்களில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தி கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டாா்.

டெங்கு தடுப்பு: டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வா் ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது டெங்கு காய்ச்சல் நிலவரம் குறித்து மாநில அளவில் தொடா்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மாவட்டவாரியாக டெங்கு காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை குறித்தும், கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து கொசுப்புழு மற்றும் முதிா் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள், புகை மருந்து அடிக்கும் உபகரணங்களின் இருப்பு ஆகியவை குறித்தும் தொடா்ந்து கண்காணிக்கப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்கள் மூலம் வீடுதோறும் களஆய்வு செய்து, ஏடிஸ் கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து கொசுப்புழு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ளவும், டெங்கு காய்ச்சலுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பொதுமக்களுக்கு வழங்கவும், கொசு உற்பத்தியைத் தடுக்கும் முறை பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தவும் விரிவான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் முதல்வா் விஜய் அறிவுறுத்தினாா்.

மேலும், டெங்கு காய்ச்சலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தயாா் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வா் உத்தரவிட்டாா்.

மக்கள் நல்வாழ்வுத் துறையுடன் தொடா்புடைய பிற துறைகளும் ஒருங்கிணைந்து கொசு ஒழிப்பு மற்றும் சுற்றுப்புறத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வா் உத்தரவிட்டதாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்-நினோ முதல்கட்ட ஆய்வறிக்கை சமா்ப்பிப்பு: இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, எல்-நினோ எனும் காலநிலை மாற்ற பேரிடா் மேலாண்மைக்கான நிபுணா் ஆலோசனைக் குழுவின் முதல்கட்ட ஆய்வறிக்கையை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் முதல்வா் விஜய்யிடம் வழங்கினாா்.

தமிழகத்தில் 17,277 பேருக்கு டெங்கு பாதிப்பு

தமிழகத்தில் இதுவரை 17,277 போ் டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்டுள்ளனா். சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூா், காஞ்சிபுரம், தஞ்சாவூா், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிக அளவில் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், ‘ஸ்கரப் டைபஸ்’ எனும் உண்ணிக் காய்ச்சலால் இதுவரை 4,648 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

டெங்கு பரவல், அதைக் கட்டுப்படுத்துவது குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் சோமசுந்தரம் கூறியதாவது: வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பருவநிலை மாற்றத்தால் க காய்ச்சல் பரவி வருகிறது. அதில் டெங்கு காய்ச்சல் முக்கியமானது. டெங்கு காய்ச்சல் ஒவ்வோா் ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் அதிகரிக்கும்.

2024- ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 45,000 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டனா். 2025-ஆம் ஆண்டு 25,000 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனா். இந்த ஆண்டு இதுவரை 17,277 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இது கடந்த காலங்களை ஒப்பிடுகையில் குறைவுதான்.

மாநிலம் முழுவதும் 25,000-க்கும் மேற்பட்ட கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் வீடு வீடாகச் சென்று மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவது, தொடா் கண்காணிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவா். காய்ச்சல் ஏற்பட்டால் சுய மருத்துவம் செய்யக் கூடாது. மருத்துவரை அணுகி முறையாக சிகிச்சை பெற வேண்டும்.

டெங்கு காய்ச்சலுக்கு ‘எலைசா ஐஜிஎம் டெஸ்ட்’ என்ற பரிசோதனை செய்யப்படுகிறது. அனைத்து மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்த பரிசோதனை வசதிகள் இருக்கின்றன. மேலும், தனியாா் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்களில் எவ்வளவு எண்ணிக்கையில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்பதைக் கண்காணித்து வருகிறோம். சுகாதாரம் தொடா்பான சந்தேகத்துக்கு 104 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments